வாஷிங்டன்: இந்தியா உட்பட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருட்களுக்கு அக்டோபர் 1-ம் தேதி முதல் 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், மருந்துப் பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்பட்டிருப்பது அமெரிக்க அதிபரின் அடுத்த தாக்குதலாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அவர் பதவியேற்றது முதல், பல்வேறு நாடுகள் மீது சரமாரியாக இறக்குமதி வரி விதிப்பை அறிவித்து வருகிறார். இந்தியா, சீனா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரியையும் அவர் அறிவித்தார்.
முதலில் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரியை விதித்த ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் அறிவித்தார். இந்தியா அதை ஏற்காததால், கூடுதலாக 25 சதவீத வரியை இந்தியா மீது விதித்தார். இதனால், இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்காவில் 50 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதனால், இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை தீவிரம்: இதற்கிடையே, வர்த்தகம் தொடர்பாக அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் வர்த்தகத் துறை சிறப்பு செயலர் ராஜேஷ் அகர்வால் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் சென்றுள்ளனர். அமெரிக்க அரசின் வர்த்தகத் துறை அமைச்சருடன், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தொடர்ந்து வர்த்தகம் மற்றும் வர்த்தகம் சாராத விவகாரங்கள் குறித்து பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான குழுவினர் இந்த வார இறுதியில் இந்தியா திரும்ப உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டணி நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது. இந்தியாவின் மொத்த பொருட்கள் ஏற்றுமதியில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி சுமார் 18 சதவீதமாகவும், இறக்குமதி 6.22 சதவீதமாகவும் உள்ளது. இந்தியாவின் மொத்த வணிக வர்த்தகத்தில் 10.73 சதவீதம் அமெரிக்காவை சார்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று முன்தினம் திடீரென அறிவித்துள்ளார். அதேநேரம், அந்த மருந்து நிறுவனங்கள் அமெரிக்காவில் தொழிற்சாலைகளை அமைத்திருந்தால் அந்த நிறுவனங்களுக்கு இந்த வரி பொருந்தாது என்றும் அறிவித்துள்ளார்.
மேலும், சமையலறை உபகரணங்கள், குளியலறை, கழிப்பறை உபகரணங்கள் மீது 30 சதவீத இறக்குமதி வரி, பர்னிச்சர் பொருட்கள் மீது 25 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுவதாகவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த கூடுதல் இறக்குமதி வரி விதிப்பு அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
மருந்து நிறுவனங்களுக்கு பாதிப்பு: ட்ரம்பின் இந்த அறிவிப்பால் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கும் என தெரிகிறது. அமெரிக்கா உடனான வர்த்தகத்தை மிகவும் சார்ந்திருக்கும் உள்நாட்டுத் தொழில்களில் ஒன்றான இந்தியாவின் மருந்து துறை, ட்ரம்பின் இந்த திடீர் தாக்குதால் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கு ரூ.31 ஆயிரம் கோடி மதிப்பிலான மருந்துகளை இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்துள்ளன. இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் ரூ.32 ஆயிரம் கோடி மதிப்பிலான மருந்துகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் இந்திய குழுவினர் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில், நல்ல செய்தி வரும் என இந்திய வர்த்தகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், மருந்துப் பொருட்களுக்கு அமெரிக்கா 100 சதவீத வரி விதித்திருப்பது வர்த்தகர்களிடம் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.