புதுடெல்லி: பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் தலைவர் எஸ். மகேந்திர தேவ் கூறியதாவது: அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து இந்தியா அதன் சொந்த விருப்பம் மற்றும் தேவையான விதிமுறைகளி்ன் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். எந்தவித அழுத்தங்களுக்கும் இடம் கொடுக்க கூடாது. வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் நமது தேச நலனுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதுவே முதன்மையானதாகவும் இருக்க வேண்டும். மற்ற நாடுகளைக் காட்டிலும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும். இதனால், இந்தியாவுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்பதோடு நாட்டின் ஏற்றுமதியும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்தியாவுடன் முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தம், இந்தோனேசியாவுடன் இறுதி செய்து கொண்டதைப் போலவே இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்க தயாரிப்புகளுக்கு இந்தோனேசிய சந்தை முழுமையான அணுகலை வழங்கும். அதேநேரம், இந்தோனேசிய பொருட்கள் அமெரிக்காவில் 19 சதவீத வரிவிதிப்புக்கு உள்ளாகும்.
மேலும், அமெரிக்காவிலிருந்து 15 பில்லியன் டாலர் எரிசக்தி, 4.5 பில்லியன் டாலர் விவசாயப் பொருட்கள், 50 போயிங் ஜெட் விமானங்களை வாங்க இந்தோனேசியா ஒப்புதல் தெரிவித்துள்ளது. விவசாய மற்றும் பால் பொருட்களுக்கான அமெரிக்காவின் வரிச் சலுகைகளுக்கான கோரிக்கையில் இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. இதுவரை, எந்தவொரு நெருங்கிய நட்பு நாட்டுக்கும் இதுதொடர்பான வரி சலுகைகளை இந்தியா வழங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.