திருப்பூர்: அமெரிக்காவுக்கான போகஸ் சந்தை திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்கா, இந்தியாவின் அனைத்து ஏற்றுமதிக்கும் 50 சதவீதம் வரி விதித்திருப்பதன் காரணமாக, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பல்வேறு தொழில்கள் பாதிப்பை சந்திக்க தொடங்கி உள்ளன. திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் பெரும் பகுதி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், கடந்த 27ம் தேதி முதல் அமெரிக்காவுக்கு செல்ல வேண்டிய சரக்குகள் தேக்கமடைந்துள்ளன. இந்த புதிய வரி விதிப்பின் காரணமாக புதிய ஆர்டர்கள் கிடைப்பதிலும் பெரும் சிக்கல்கள் எழுந்துள்ளன.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், சென்னையில் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தொழில்துறையினருடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கலந்துரையாடல் மேற்கொண்டு, பல்வேறு துறைகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். நிகழ்வில் திருப்பூர் பின்னலாடைத் துறை சார்பில் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக துணை தலைவர் சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
திருப்பூரில் பின்னலாடை துறை கடந்த 2024- 25ம் நிதி ஆண்டில் சுமார் ரூ.44,747 கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி, உள்நாட்டு வணிகத்தில் ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பில் வர்த்தகம் செய்து வருகிறது. இதில் 30 முதல் 35 சதவீதம் அமெரிக்க சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, தற்போதைய நெருக்கடியில் இருந்து திருப்பூர் தொழில்துறையைப் பாதுகாக்க கரோனா தொற்று காலத்தில் மத்திய அரசு வழங்கிய சிறப்பு நிதி உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும்.
டியூட்டி டிராபேக் சதவீதம் உயர்த்துதல், ஏற்றுமதியாளர்கள் வங்கிக் கடன் திருப்பி செலுத்துவதில் கால அவகாசம், ஏற்றுமதிக்கு சிறப்பு சலுகை, ஏற்றுமதி வாய்ப்புள்ள மற்ற சந்தைகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (ஏஇபிசி) துணைத் தலைவர் ஏ.சக்திவேல், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து அளித்த கடிதத்தில், அமெரிக்க சந்தைக் கான போகஸ் சந்தை திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்துதல், வட்டி சம நிலைப்படுத்தும் திட்டத்தை மீட்டமைத்தல், வங்கிக் கணக்குகள் விதிமுறைகளை மறுவகைப்படுத்துவதன் மூலம் 2 ஆண்டு கால அவகாசம் வழங்குதல், அமெரிக்க பருத்தி இறக்குமதியைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்திய ஆடைகளுக்கு விலக்கு அளிக்கும் கோரிக்கையை அமெரிக்க அதிகாரிகளிடம் எடுத்துக் கூறுதல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.