புதுடெல்லி: அமெரிக்காவுக்கான இந்திய பொருட்களின் ஏற்றுமதி 7 மடங்கு வரை அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான புதிய வரி விகிதங்களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதன்படி இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக 25 சதவீத வரி விதிப்பு கடந்த 7-ம் தேதி அமலுக்கு வந்தது.
மேலும் 25 சதவீத வரி விதிப்பு வரும் 27-ம் தேதி அமலுக்கு வரும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்படுகிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார். இந்த சூழலில் அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு அமலுக்கு வருவதற்கு முன்பாக அந்த நாட்டுக்கு அனுப்பப்படும் இந்திய பொருட்களின் அளவு சுமார் 7 மடங்கு வரை அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து பொருளாதார நிபுணர்கள் கூறியதாவது: கடந்த ஆண்டு ஏப்ரல்- ஜூலை மாதங்களில் அமெரிக்காவுக்கான இந்திய பொருட்களின் ஏற்றுமதி 27.6 பில்லியன் டாலராக இருந்தது. நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் இந்திய பொருட்களின் ஏற்றுமதி 33.5 பில்லியன் டாலராக உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது தற்போது 21.4 சதவீதம் வரை ஏற்றுமதி அதிகரித்திருக்கிறது.
கூடுதல் வரி விதிப்பு அமலுக்கு வருவதற்கு முன்பாக இந்திய ஏற்றுமதியாளர்கள் அதிக பொருட்களை அமெரிக்காவுக்கு அனுப்பி வருகின்றனர். இதன்காரணமாக இந்திய பொருட்களின் ஏற்றுமதி சுமார் 7 மடங்கு வரை அதிகரித்து வருகிறது. இவ்வாறு பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர். இந்திய ஆடை ஏற்றுமதியாளர்களின் கூட்டமைப்பான ஏஇபிசி தலைவர் சுதிர் சேக்ரி கூறும்போது, “வரி விகிதம் தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அமெரிக்க குழுவினர் ஆகஸ்ட் 25-ம் தேதி டெல்லிக்கு வருவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போதைய சூழலில் அமெரிக்க குழுவின் டெல்லி பயணம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. எனினும் அடுத்த சில வாரங்களில் இரு நாடுகள் இடையே சுமுக உடன்பாடு எட்டப்பட வாய்ப்பிருக்கிறது” என்று தெரிவித்தார். இந்திய வைர வியாபாரிகள் கூறும்போது, “அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய வைரங்கள் மற்றும் தங்க நகைகள் சுமார் 28 சதவீதம் வரை அதிகரித்திருக்கிறது” என்று தெரிவித்தனர்.