நாகப்பட்டினம்: அமெரிக்காவில் இந்திய பொருட்களை இறக்குமதி செய்ய 50 சதவீதம் வரி விதிப்பு அமலுக்கு வந்த நிலையில், இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட 500 டன் இறால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதனால், இறால் விவசாயிகள் தங்கள் தொழில் பெருமளவில் பாதிப்பை சந்திக்கக் கூடும் என்ற அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
நாட்டின் பெரும் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் தொழில்களில் கடல் உணவுப் பொருட்கள் பிரதான இடத்தை பெற்றுள்ளன. அவற்றில் இறால்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. கடலில் இருந்து பிடிக்கப்படும் இறால்கள் மற்றும் வளர்ப்பு இறால்கள் தமிழகத்தில் இருந்து அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஏற்றுமதியாகிறது.
தமிழகத்தில் இறால் உற்பத்தியில் நாகை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் இறால்களில் 60 சதவீதம் நாகை மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த இறால் விவசாயத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளே ஈடுபடுகின்றனர் என்பது தனி சிறப்பு.
மின் கட்டண உயர்வு, இடுபொருட்கள் விலை உயர்வு, ஏற்றுமதியாளர்களால் ஏற்படுத்தப்படும் விலை வீழ்ச்சி என பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள இறால் விவசாயிகளுக்கு, இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதிப்பை அமல் செய்துள்ளது தற்போது பேரிடியாய் அமைந்திருக்கிறது.
அமெரிக்காவில் ஆக.27-ம் தேதி அதிகாலை முதல் 50 சதவீத வரி என்பது அமலுக்கு வந்த நிலையில், இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட 500 டன் இறாலை அமெரிக்காவில் உள்ள இறக்குமதியாளர்கள் திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். இது இறால் விவசாயிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இனிமேல் இறாலுக்கு உரிய விலை கிடைக்குமா என்ற கவலையும் இறால் விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.
பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் இறால்களுக்கு உள்நாட்டு சந்தை இல்லை. 95 சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மட்டுமே செய்யப் படுகிறது. தற்போது அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்றுமதியாளர்கள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் கிடைக்கும் விலைக்கு கூடுதல் லாபம் வைத்து விற்பனையில் ஈடுபடுவார்கள். 50 சதவீத வரி விதிப்பை இறால் விவசாயிகள் தலையில் கட்டிவிடுவார்கள்.
அதனால், அவர்கள் கேட்கும் விலைக்கு இறாலை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மிகப்பெரிய அளவில் இந்த சீசனில் இறால் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்ந்தால், பெரும்பான்மையான இறால் விவசாயிகள் இத்தொழிலை விட்டே வெளியேறக்கூடிய அபாயம் உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.