புதுடெல்லி: இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மற்றும் பிரோசாபாத்தில் இருந்து ரூ.2,500 கோடி மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் இருந்து ஆண்டுதோறும் சுமார் ரூ.1,000 கோடி மதிப்பிலான கைவினைப் பொருட்கள், சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான காலணிகள், சுமார் ரூ.500 கோடி மதிப்பிலான ஜவுளி, கம்பளங்கள் மற்றும்பிற பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதன் அருகிலுள்ள பிரோசாபாத்தில் இருந்து சுமார் ரூ.800 கோடி மதிப்பிலான காலணிகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகிறது. இதுபோல் இங்கு உற்பத்தியாகும் கண்ணாடிப் பொருட்களில் 60 சதவீதம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால் இப்பொருட்களின் விலை அந்நாட்டில் ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது. இது நேரடியாக இந்திய தயாரிப்பாளர்களை பாதித்துள்ளது.
இதுகுறித்து உ.பி. கண்ணாடி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் முகேஷ் பன்சால் கூறுகையில், “அமெரிக்காவிலிருந்து பெருமளவு ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புதிய முன்பதிவுகளும் தற்போது செய்யப்படவில்லை. இதனால் வரும் செப்டம்பர் 3, 4 தேதிகளில் டெல்லியில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எங்கள் பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்க வேண்டும், உள்நாட்டு சந்தையைவிரிவுபடுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்” என்றார்.
ராஜஸ்தானிலும் பாதிப்பு: ராஜஸ்தானிலிருந்து ரத்தின கற்கள் மற்றும் நகைகள் சுமார் ரூ.18,000 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஜெய்ப்பூர் வர்த்தகர்களுக்கு அமெரிக்கா மிகப்பெரிய சந்தையாக உள்ளது. ஜெய்ப்பூர் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.3,200 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் வண்ண ரத்தினங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது.
இதுகுறித்து ராஜஸ்தானின் ஜெம் பேலஸ் உரிமையாளர் சுதிர் காஸ்லிவால் கூறும்போது, “அமெரிக்காவுக்கான எங்கள் ஏற்றுமதி ஆர்டர்கள் முற்றிலுமாக நின்றுவிட்டன. எங்கள் கடைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் 70 சதவீதம் பேர் அமெரிக்கர்கள். அவர்கள் இங்கு வாங்கும் நகைகளுக்கு தங்கள் நாட்டில் அதிக வரி செலுத்த வேண்டும் என்பதால் கொள்முதல் செய்ய மாட்டார்கள்” என்றார். ஜெய்ப்பூரின் வர்த்தகர்களுக்கு அமெரிக்கா மிகப்பெரிய சந்தையாக உள்ளது. இந்த வருடம் அவர்களுக்கு கிறிஸ்துமஸ் ஆர்டர் எதுவும் இதுவரை வரவில்லை என கூறப்படுகிறது.