அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்பை எதிர்கொள்ள உலகின் பிற நாடுகளுடனான வர்த்தக வாய்ப்புகளை கூடுதலாக உருவாக்க வேண்டும் என மத்திய அரசை திருப்பூர் அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் கூட்டம், திருப்பூர் குமரன் சாலையில் உள்ள எல்பிஎப் பனியன் சங்க அலுவலகத்தில், பனியன் சங்க பொதுச்செயலாளர் க.ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
சர்வதேச அளவில் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக திருப்பூர் உள்ளது. ஆண்டு தோறும் இந்திய ஜவுளி ஏற்றுமதியில் 45 சதவீதத்துக்கும் அதிகமான பருத்தி, செயற்கை நூலிழை மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான ஆயத்த ஆடைகள் திருப்பூரில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.44 ஆயிரம் கோடி வரை வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் ரூ. 15 ஆயிரம் கோடி வரை, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவின் ஏற்றுமதிக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். இதனால் திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பனியன் தொழில் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும். இத்தகைய வரி விதிப்பின் காரணமாக ஆயிரக்கணக்கான பனியன் தொழிற் சாலைகள் மூடப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு பனியன் உள்ளிட்ட ஜவுளித் தொழிலை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, உயர்ந்துள்ள வரிச்சுமைக்கேற்ப ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகை வழங்க வேண்டும். கார்ப்பரேட் வரியை உயர்த்துவதன் மூலமும், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வர்த்தக வருமானத்தின் ஒருபகுதியை எடுப்பதன் மூலமாகவும் ஊக்கத் தொகைக்கான நிதியை திரட்ட இயலும்.
ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றுமதி கடன் தேவையை பூர்த்தி செய்ய, அதிக வங்கி கடன்கள், அதற்கான உத்தரவாதம் அல்லது காப்பீடு மூலம் நிதி ஆதரவு வழங்க வேண்டும். வட்டியில் சலுகை, கடன் உதவி ஆகியவை அமெரிக்காவின் வரி தாக்கத்தினைக் கடந்து செல்லவும் சர்வதேச சந்தையில் போட்டியை சமாளிக்கவும் உதவும். பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வர்த்தக வாய்ப்புகளை, கூடுதலாக ஏற்படுத்தி தர வேண்டும். உள்நாட்டு சந்தையை பலப்படுத்தவும், மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர் பனியன் தொழிலை பாதுகாக்கும் வகையில் வங்கதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஜவுளி ஆடைகளுக்கு வரி விதித்து உள்நாட்டு ஜவுளி வர்த்தகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலை இழப்பால் வருமானம் இழக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு உடனடியாக தொழிலாளர்களையும், தொழில்களையும் பாதுகாக்கின்ற வகையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி செப். 1-ம் தேதி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வழியாக பிரதமர் மற்றும் மத்திய நிதியமைச்சர், ஜவுளித் துறை அமைச்சர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் ஏஐடியூசி என்.சேகர், சிஐடியு ஜி.சம்பத், ஐஎன்டியுசி பெருமாள், ஹச்எம்எஸ் கோவிந்தசாமி, டிடீஎம்எஸ் மனோகர், எம்எல்எப் பாண்டியன், பிஎம்எஸ் லட்சுமி நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.