புதுடெல்லி: உலகின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஜேன் ஸ்ட்ரீட் இந்திய சந்தைகளை ஏமாற்றி ரூ.36,500 கோடி வருவாய் ஈட்டியதாக எழுந்த புகாரையடுத்து அந்த நிறுவனத்தின் மீது செபி முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதன்படி ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் அதன் துணை நிறுவனங்களை இந்திய பங்குச் சந்தையில் இருந்து செபி தடை செய்துள்ளது. மேலும், சட்டவிரோதமாக ஈட்டியதாக கூறப்படும் ரூ.4,843 கோடியை திரும்பச் செலுத்தவும் செபி உத்தரவிட்டுள்ளது.
ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம் பம்ப் அண்ட் டம்ப் உத்தியை பின்பற்றி இந்திய பங்குச் சந்தைகளை ஏமாற்றியுள்ளதாக செபி தெரிவித்துள்ளது. அதன்படி காலையில் அதிக அளவில் பேங்க் நிப்டி பங்குகளை வாங்கி குறியீடுகளை உயர்த்தி பின்னர் மாலையில் வேகமாக பங்குகளை விற்று ஆதாயம் ஈட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை ஜேன் ஸ்ட்ரீட் மறுத்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜேன் ஸ்ட்ரீட் கடந்த 2000-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது, அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களையும், அலுவலகங்களையும் கொண்டது. இந்த நிறுவனம் 45 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.
ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, கடந்த ஆண்டு ஜேன் ஸ்ட்ரீட் 20.5 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. ஜனவரி 2023 மற்றும் மார்ச் 2025-க்கு இடையில் இன்டக்ஸ் ஆப்ஷன் ட்ரேடிங் மூலம் அந்த நிறுவனம் கிட்டத்தட்ட 5 பில்லியன் டாலரை அதாவது இந்திய மதிப்பில் ரூ.36,671 கோடியை சம்பாதித்துள்ளது. இதில் சட்ட விரோதமாக ரூ.4,843 கோடி ஆதாயம் பெற்றதாக செபி தற்போது தெரிவித்துள்ளது.