புதுடெல்லி: அடுத்த ஆண்டுக்குள் 10 கிராம் தங்கம் விலை ரூ.1.25 லட்சம் வரை உயரும் என ஐசிஐசிஐ வங்கியின் பொருளாதார ஆய்வு தெரிவிக்கிறது.
தங்கம் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக ஐசிஐசிஐ வங்கியின் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 33 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல அமெரிக்க பொருளாதார வளர்ச்சியும் மந்தமாகி உள்ளது.
இதனால் சர்வதேச சந்தையில் இப்போது 3,400 டாலராக உள்ள ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இந்த ஆண்டு இறுதிக்குள் 3,600 டாலர் வரை உயர வாய்ப்பு உள்ளது. இதுபோல அடுத்த ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் இந்த விலை 3,800 டாலர் வரை உயர வாய்ப்பு உள்ளது.
ரூபாய் மதிப்பு சரிவு: இந்தியாவைப் பொருத்தவரை 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ஏற்கெனவே ரூ.1 லட்சத்தைத் தாண்டிவிட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் இது ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வரை உயரும். அடுத்த ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் இது ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை உயர வாய்ப்பு உள்ளது. சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயர்ந்து வருவதுடன் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. இப்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.88-ஐ கடந்துவிட்டது. இதுவும் இந்தியாவில் தங்கம் விலை உயர்வுக்கு மற்றொரு காரணம் ஆகும்.
மேலும் இந்திய முதலீட்டாளர்கள் தங்கம் தொடர்பான பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. 2024-ம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் ரூ.4,520 கோடியாக இருந்த முதலீடு, நடப்பு ஆண்டின் முதல் 8 மாதங்களில் 2 மடங்கு அதிகரித்து ரூ.9,280 கோடி ஆகி
உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.