தேன்கனிக்கோட்டை அருகே 9 கிமீ தூரம் தார் சாலை வசதியில்லாததால் மலைக் கிராம மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தேர்தல் வாக்குறுதியில் மட்டும் சாலை திட்டம் இடம்பெறுவதாக மலைவாழ் மக்கள் வேதனை தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே பெட்டமுகிலாளம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களான மேலூரிலிருந்து தொழுவபெட்டா வழியாக டி.பழையூர், குல்லட்டி, கவுனூர், தொட்டதேவனஅள்ளி உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்ல வேண்டும். இந்த மலைக் கிராமங்களில் சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக மேலூரிலிருந்து தொழுவபெட்டாவுக்கு 9 கி.மீ தூரம் வனப் பகுதிக்கு இடையே மண் சாலை மட்டுமே உள்ளது. இந்த மண் சாலையைத் தார் சாலையாக மாற்ற பல ஆண்டுகளாக இக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்தும், வனத்துறை அனுமதி கிடைக்காததால், சாலை வசதி இக்கிராம மக்களுக்குக் கனவாக இருந்து வருகிறது.
மேலும், இம்மலைக் கிராம மாணவ, மாணவிகள் உயர் கல்வி பயில 10 கிமீ தூரத்தில் உள்ள உனிசெட்டி மற்றும் 24 கிமீ தொலைவில் உள்ள தேன்கனிக்கோட்டைக்கு செல்ல வேண்டும். இங்கு செல்ல மேலூர் வரை 9 கிமீ தூரம் உள்ள மண் சாலையை இருசக்கர வாகனம் மற்றும் சரக்கு வாகனங்களில் கடந்து சென்று வருகின்றனர். மாலை மற்றும் இரவு நேரங்களில் மண் சாலையில் வன விலங்குகள் நடமாட்டமும் இருக்கும் நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலை உள்ளதாக மலைவாழ் மக்கள் வேதனை தெரிவித்தனர்.
இது தொடர்பாக மலைக் கிராம மக்கள் கூறியதாவது: தொழுவபெட்டாவைச் சுற்றிலும் உள்ள குக்கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தேன்கனிக்கோட்டையில் இருந்து மேலூர் வரைக்கும் அரசுப் பேருந்து இயக்கப்படுகின்றன. அதன் பின்னர் மேலூரில் இருந்து தொழுவபெட்டாவுக்கு 9 கிமீ வனப்பகுதியில் உள்ள மண் சாலையில் சென்று வருகிறோம். இச்சிரமத்தால் எங்கள் குழந்தைகள் மேல்நிலைக் கல்வியைத் தொடர முடியாத நிலையுள்ளது. தேர்தலுக்கு, தேர்தல் மேலூர் – தொழுவபெட்டாவுக்கு சாலை அமைப்பதாக அரசியல் கட்சிகளின் வாக்குறுதியில் மட்டும் இடம்பெறுகிறது. தேர்தலுக்குப் பின்னர் நாங்கள் புறக்கணிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலை நாங்கள் புறக்கணிப்பதாக அறிவித்தோம். அதைத் தொடர்ந்து, அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் எங்களை சமாதானம் செய்தனர். மேலும், குண்டும், குழியுமாக இருந்த சாலையில் அவசர அவசரமாக மண் கொட்டி நிரப்பினர். தேர்தலுக்குப் பின்னர் சாலை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, மழை பெய்தால், மண் சாலை சேறும், சகதியுமாக மாறி இருசக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் சேற்றில் சிக்கிப் பயணிக்க முடியாத நிலையுள்ளது.
எனவே, எங்கள் கிராமங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, அடிப்படை தேவையான தார் சாலை வசதியை ஏற்படுத்திக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் எங்களின் பொருளாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சி அடைய வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.