சிவகங்கை: மாற்றுத் திறனாளி உள்ளிட்டோருக்கான உதவித்தொகைக்கு ஒப்புதல் கொடுப்பது கடந்த 8 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருவாய்த் துறையின் சமூக பாதுகாப்புத் திட்டம் மூலம் மாற்றுத் திறனாளிகள், முதியோர், கணவரால் கைவிடப்பட்டோர், முதிர்கன்னிகள் ஆகியோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தகுதி உள்ளோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 2023 செப்டம்பரில் இருந்து மாதந்தோறும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,500-ம், மற்றவர்களுக்கு ரூ.1,200-ம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக விண்ணப்பித்தவர்களுக்கு, முதலில் உதவித்தொகை பெறுவதற்கான அனுமதி ஆணை மட்டும்வழங்கப்படுகிறது.
பின்னர் ஓராண்டு கழித்து உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதுவும் மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமே உதவித்தொகை அனுமதிக்கப்படுகிறது. முதியோர் உள்ளிட்ட மற்றவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படவில்லை.
மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு கடந்த காலங்களில் உதவித்தொகை தாமதமாக வழங்கத் தொடங்கினாலும், ஆணை பெற்ற மாதத்தில் இருந்து நிலுவைத்தொகையும் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டது. ஆனால், தற்போது நிலுவைத்தொகையும் வழங்குவதில்லை. இதனால் உதவித்தொகைக்கு விண்ணப்பித்த பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் கூறியதாவது: ஓராண்டுக்கு முன் விண்ணப்பித்தபோது, விண்ணப்பத்தை ஆய்வு செய்து, உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை முதலில் வழங்கினர். அந்த ஆணை பெற்ற பலர் உதவித்தொகைகிடைக்காமல் காத்திருக்கின்றனர். கடந்த 8 மாதங்களாக விண்ணப்பித்துவிட்டு, ஆணைக்காகவே காத்திருக்கும் நிலையும் உள்ளது. வட்டாட்சியர் அலுவலகங்களில் கேட்டால், கிராம நிர்வாக அலுவலர் ஒப்புதல் கொடுக்க வில்லை என்கின்றனர்.
கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டால், ஒப்புதல் கொடுக்கும் ‘ஆப்ஷனை’ நிறுத்தி வைத்துள்ளதாக கூறு கிறார். இதனால் மாற்றுத் திறனாளிகள் மட்டுமின்றி முதியோர் உள்ளிட்டோர் உதவித்தொகைக்காக அலைந்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து வருவாய்த் துறையினரிடம் கேட்டபோது, “கிராம நிர்வாக அலுவலர் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் கொடுக்கும் ‘ஆப்ஷனை’ நிறுத்தி வைத்துள்ளனர். ஓராண்டுக்கு முன் ஆணை பெற்றவர்களுக்கு மட்டும் அவ்வப் போது உதவித்தொகை வழங்க அனுமதி கொடுக்கின்றனர். அதுவும் மே மாதத்துக்கு பிறகு அனுமதி வரவில்லை” என்றனர்.