சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதிமுக சார்பில் ஏழை எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான பழனிசாமியின் 71-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பழனிசாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து கட்சியின் பல்வேறு அணிகள் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 1 லட்சம் பேருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்தியாவை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் நலன் காக்க அனைத்து வழிபாட்டு தலங்களிலும் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.
சில இடங்களில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் பரிசு பெட்டகங்களை கட்சி நிர்வாகிகள் வழங்கினர். பல இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி, அண்ணா தொழிற்சங்க பேரவை, மருத்துவ அணி ஆகியவை சார்பில் ரத்ததான முகாம்களும் நடத்தப்பட்டன.
பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அவர்களுக்கு நன்றி தெரிவித்து பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் உள்ளிட்டோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.