சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் 613 அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான ஆணைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,600 எம்பிபிஎஸ் இடங்கள், 1,583 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.
இதில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 494 எம்பிபிஎஸ் இடங்கள், 119 பிடிஎஸ் இடங்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், சிறப்பு பிரிவு (மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு, விளையாட்டு வீரர்) சிறப்பு பிரிவு கலந்தாய்வு மற்றும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நேரடியாக நேற்று சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.
இதில் தேர்வான மாணவ, மாணவிகளுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். இதன்படி 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் விவசாயி, கூலி தொழிலாளி உட்பட ஏழை குடும்பத்தை சேர்ந்த 613 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.

உடன் மகள் சம்யுக்தா. படம்: எல்.சீனிவாசன்
இந்நிகழ்வில் சுகாதாரத்துறை செயலர் ப.செந்தில்குமார், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் (பொ) தேரணிராஜன், தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதேபோல் முதல் சுற்று பொது கலந்தாய்வு என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் நேற்று காலை காலை 10 மணிக்கு தொடங்கியது.
ஆக.5-ம் தேதி தரவரிசை பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. இடஒதுக்கீடு விவரங்கள் ஆக.6-ம் தேதி வெளியாகும். ஆக.11-ம் தேதி மாலை 5 மணிக்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும்.
மருத்துவராகும் 49 வயது பெண்: தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் அமுதவல்லி (49). இவரது மகள் சம்யுக்தா கிருபாலனி. நீட் தேர்வுக்கு சம்யுக்தா தயாராகி வந்த நிலையில், மகளின் வழிகாட்டுதலின்படி, மாற்றுத் திறனாளி தாயாரான அமுதவல்லியும் நீட் தேர்வு எழுதி 147 மதிப்பெண் பெற்றார். மகள் 450 மதிப்பெண்களும் பெற்றார்.
இருவரும் எம்பிபிஎஸ் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தனர். அமுதவல்லி மாற்றுத்திறனாளி என்பதால், சிறப்பு பிரிவு கலந்தாய்வில் அவருக்கு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடம் கிடைத்துள்ளது. மகள் சம்யுக்தா ஆன்லைனில் நடைபெறும் பொது பிரிவு கலந்தாய்வில் பங்கேற்கிறார். அவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.