பெரியகுளம்: தேனி மாவட்டம் தேவதானப் பட்டியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் பாண்டியராஜன். இவர், தனது கட்சிக்காரர் ஒருவருக்கு ஆதரவாக தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, தனது கட்சிக்காரருடன் வந்து புகார் அளித்ததை நிரூபிப்பதற்காக 14.1.2025-ல் காவல் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை தனக்கு வழங்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பாண்டிய ராஜன் மனு அளித்தார்.
அதையேற்று, அன்றைய தினத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் அவரிடம் வழங்கப்பட்டது. அதை ஆய்வு செய்தபோது, இளைஞர் ஒருவரை போலீஸார் இழுத்துவந்து சரமாரியாக தாக்கும் காட்சிகள் இருந்தன. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. போலீஸாரால் தாக்கப்பட்டவர் தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ் என்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சம்பவத்தன்று ரமேஷ் என்பவர் மதுபோதையில் மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் சாலையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்து கொண்டிருந்தார். அவரை ஒழுங்குபடுத்த முயன்றபோது போலீஸாரிடம் பிரச்சினை செய்தார்.
அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து கட்டுப்படுத்த முயற்சித்தபோது அதிகப்படியான பலப்பிரயோகம் பயன்படுத்தப்பட்டது. ஆனால், அவரை போலீஸார் தாக்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதனிடையே, ஆய்வாளர் அபுதல்ஹா, சிறப்பு சார்பு ஆய்வாளர் சிவசுப்பு, ஏட்டு பாண்டி, முதல்நிலைக் காவலர்கள் மாரிச்சாமி, வாலிராஜன் ஆகியோரை தேனி ஆயுதப் படைக்கு மாற்றி காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஏடிஎஸ்பி ஜெரால்டு அலெக்சாண்டர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.