சென்னை: காலநிலை மாற்றம் குறித்து 50 ஆண்டுகளுக்கு முன்பே வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பேசியிருக்கிறார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: வரலாற்றில் ஒரு சிலர்தான் பல கோடி பேர் மீது தாக்கம் செலுத்தும் வாழ்வை வாழ்ந்திருக்கிறார்கள். அப்படி ஒருவராக விளங்கிக் கொண்டிருக்கக்கூடியவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.
நாட்டின் பெரும்பாலான மக்கள், பட்டினியால் காய்ந்தும் – கால் வயிறும் – அரை வயிறும் சாப்பிட்டு தவித்த காலத்தில், மக்களின் வயிறு நிறைய, மாபெரும் புரட்சி நடத்திய எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரை இந்தியா என்றைக்கும் நிச்சயம் மறக்காது.
கடைக்கோடி கிராமத்தில் இருக்கக்கூடிய ஒரு விவசாயிடம் அதே எளிமையுடன், மரியாதையுடன் பேசக்கூடியவர். அதுவும் பாரத ரத்னா எம்.எஸ்.சுவாமிநாதன, 2021-ஆம் ஆண்டு M.S.S.R.F. சார்பில் நடந்த பன்னாட்டுக் கருத்தரங்கை தொடங்கி வைத்து, நான் அவரைப் பாராட்டி பேசியிருக்கிறேன்.
“இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை” என்று உலகமே அவரை அழைத்தாலும், நமக்கு அவர், உணவுப் பாதுகாப்பின் காவலராகவும், குரலற்றோரின் குரலாகவும், எளிமையின் உருவமாகவும் அவர் இருந்தார். தான் கொண்ட அறிவை, தான் கற்ற அறிவியலை, மக்களின் பசியைப் போக்குவதற்கு பயன்படுத்திய, தொலைநோக்குச் சிந்தனையாளர் எம்.எஸ்.சுவாமிநாதன்.
இன்றைக்கு உலகமே பேசக்கூடிய அளவுக்கு, காலநிலை மாற்றம் குறித்து 50 ஆண்டுகளுக்கு முன்பே அவர் பேசியிருக்கிறார். கெமிக்கல் உரங்களுடன் நச்சுத்தன்மை நிலம் எப்படி பாழாகிறது என்றெல்லாம் தெளிவாக எடுத்துச் சொல்லி, வயிறு நிரம்பினால் மட்டும் போதாது, நாம் வழங்குகின்ற உணவு சத்தானதாவும், நிலையானதாவும் இருக்கவேண்டும் என்று சொன்னார்.
வேளாண்மைக்கான நவீன கருவிகளை குறைந்த விலையில் விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கின்ற பணியையும் நாம் செய்தாக வேண்டும். இப்போது கூட இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அடுத்ததாக, சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறக்கூடிய வேளாண் வணிகத் திருவிழா. இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது – அதைத் தொடங்கி வைப்பதற்கு இங்கிருந்து நான் நேரடியாக அங்கு செல்ல இருக்கிறேன்.
இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைத்த ஆளுமைகளில் ஒருவரான எம்.எஸ்.சுவாமிநாதன் பெருமைப்படுத்தும் வகையில், நம்முடைய திராவிட மாடல் அரசில், போரூர் ஈரநிலப் பசுமைப் பூங்காவுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுடைய பேரைச் சூட்டி திறந்து வைத்திருக்கிறோம்.
மேலும், தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையில் இருக்கின்ற வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ‘டாக்டர். எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்’ என்று அழைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறோம். அதேபோல, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் பெயரில், ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என்று சொல்லியிருக்கிறோம்.
கடந்த ஆகஸ்ட் மாதம், டெல்லியில் நடைபெற்ற ‘பாரத ரத்னா’ எம். எஸ். சுவாமிநாதன் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு மாநாட்டில், அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாடு சார்பாக கலந்து கொண்டு, சுவாமிநாதன் குறித்த புத்தகத்தையும் வெளியிட்டார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.