சென்னை: மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 போலீஸாருக்கு ‘காந்தியடிகள் காவலர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மதுவிலக்கு அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியதற்காக விழுப்புரம் மண்டலம், மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் ப.நடராஜன், விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மா.சத்யாநந்தன், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சு.மணிகண்டன், கடலூர் மாவட்டம், புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் க.நடராஜன் மற்றும் சேலம் மாவட்டம், மத்திய நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலர் வா.பெ.கண்ணன் ஆகிய 5 பேருக்கு 2025-ம் ஆண்டுக்கான ‘காந்தியடிகள் காவலர்’ விருது வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்விருது, முதல்வரால் 2026-ம் ஆண்டு ஜன.26-ம் தேதி குடியரசு தினத்தன்று வழங்கப்படும். இவ்விருதுடன், பரிசுத் தொகையாக ஒவ்வொருவருக்கும் ரூ.40 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.