சென்னை: கடன் நிறுவனங்களின் வலுக்கட்டாய நடவடிக்கையில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் சட்டம், உயிரி கழிவுகளை கொட்டுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட 5 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன.
கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் நிதி மசோதாக்கள் உட்பட 18 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, இறுதிநாளான ஏப்.29-ம் தேதி நிறைவேற்றப்பட்டன. இவற்றில், நிதி மசோதாக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் அளிக்கும் சட்ட மசோதாக்கள் உட்பட 6 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்கெனவே ஒப்புதல் அளித்து, அவை அரசிதழில் வெளியிடப்பட்டு, அமலுக்கு வந்துவிட்டன.
இந்நிலையில், சமீபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, 5 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு: தீ தடுப்புக்கான செயல்பாட்டு நேரத்தை குறைக்க, அறிவியல் சார் நில வரைபடம் அடிப்படையில் புதிய தீயணைப்பு நிலையங்களின் அமைவிடங்கள் ஏற்படுத்துவது தொடர்பாக தீயணைப்புத் துறை சட்டத்தை திருத்துவதற்கான சட்ட மசோதா, கடன் நிறுவனங்களின் வலுக்கட்டாய நடவடிக்கைகளில் இருந்து பொதுமக்களை காப்பதற்கான சட்டமசோதா, நகர்ப்புற திட்டமிடல் மற்றும் போக்குவரத்து திட்டமிடலை ஒருங்கிணைக்கும் வகையில் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையத்தின் (கும்டா) உறுப்பினர் செயலரை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) பதவி வழி செயலராக சேர்க்க முடிவு செய்து, நகர ஊரமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா.
மேலும் தொழில் புரிவதை எளிதாக்கும் வகையில், கடைகள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான தொழிலாளர் சட்டங்களில் கடும் தண்டனைகளை குறைத்தல் உள்ளிட்டவற்றுக்கான சட்டத்திருத்தம், உயிரி மருத்துவக் கழிவுகளை குவித்தல், அண்டை மாநிலங்களில் இருந்து கொண்டு வந்து கழிவுகளை கொட்டுவோர் மீது வழக்கு பதிவு செய்து தண்டனை வழங்குவதற்கான சட்டம் என 5 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்ட மசோதாக்கள் தற்போது அமலுக்கு வந்துள்ளன.
இதன்படி, இனி உயிரி மருத்துவக் கழிவுகளை வெளிமாநிலங்களில் இருந்து எடுத்து வந்து தமிழகத்தில் கொட்டுவோர், குவித்து வைப்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வழிவகை ஏற்பட்டுள்ளது. அதேபோல், இதில் கடன் நிறுவனங்களின் வலுக்கட்டாய நடவடிக்கைகளில் இருந்து பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், நலிந்த குழுக்கள், தனிநபர்கள், குறிப்பாக விவசாயிகள், மகளிர், மகளிர் சுய உதவிக்குழுக்களை விடுவிக்கவும், பாதுகாப்பதற்காவும் புதிய சட்டம் ஆளுநர் ஒப்புதலுடன் அமலுக்கு வந்துள்ளது.
இதன்மூலம், பணக் கடன் வழங்கும் நிறுவனங்கள் பதிவு செய்ய வேண்டும். காவல் துறையில் இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டால், வாங்க மறுக்கக் கூடாது. பதிவு சான்றிதழ் பெறாமல் கடன் வழங்கினால், 3 ஆண்டுகள் வரை சிறை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். கடன் பெறுபவரிடம் இருந்து கடனை வசூலிக்கும்போது, கடன்பெறுபவர், அவரது குடும்ப உறுப்பினர்கள் வலுக்கட்டாய நடவடிக்கைகளுக்கு உட்படுத்தக் கூடாது.
இதன்படி வலுக்கட்டாயப்படுத்துதல், வெளித்தரப்பு, வெளிப்புற முகமையின் சேவையை பயன்படுத்துதல், முக்கிய ஆவணங்கள், பொருட்கள் அல்லது வீட்டு உடமைகளை வலுக்கட்டாயமாக எடுத்தல் போன்றவை நடைபெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.