சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி நிறைவேற்றி அனுப்பப்பட்ட நிதி தொடர்பான 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். 14 மசோதாக்கள் அவரிடம் நிலுவையில் உள்ளன.
சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் செய்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், தனது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது. மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும், குடியரசுத் தலைவர் 3 மாதங்களிலும் முடிவு எடுக்க வேண்டும் என்றும் கெடு விதித்து உத்தரவிட்டது.
இதற்கிடையே, தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி, ஏப்ரல் 29-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த கூட்டத்தொடரில் நிதி தொடர்பான 4 மசோதாக்கள் உட்பட மொத்தம் 18 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இவை அனைத்தும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன.
இந்நிலையில், துறைகளுக்கான நிதி ஒதுக்கம், மானிய கோரிக்கைகள் உட்பட நிதி தொடர்பான 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
நிலுவை மசோதாக்கள்: கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் உருவாக்குவது, நிதி நிறுவனங்களின் வலுக்கட்டாய கடன் வசூல் நடவடிக்கைகளில் இருந்து மக்களை பாதுகாப்பது, தமிழ்நாடு கல்வியியல், விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிப்பது – நீக்குவதற்கான அதிகாரத்தை அரசுக்கு வழங்குவது, மின்தூக்கிகள், நகரும் மின் படிக்கட்டுகளுக்கு ஆன்லைனில் உரிமம் வழங்குவது, அறிவியல் சார் நில வரைபட அடிப்படையில் தீயணைப்பு நிலையங்களை அமைப்பது தொடர்பான தீயணைப்பு சட்ட திருத்த மசோதா, அனுமதியின்றி உயிரி மருத்துவ கழிவுகளை கொட்டுவோரை தண்டிக்கும் சட்ட மசோதா உள்ளிட்ட 14 மசோதாக்கள் தற்போது ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன.