சென்னை: மத்திய அரசு மீது பழிபோடாமல் தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் திமுக செய்த சாதனைகளை பட்டியலிட வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: கங்கை கொண்ட சோழபுரம் என்ற சிறிய ஊரின் தலையெழுத்தை, பிரதமரின் வருகை நிச்சயமாக மாற்றும். பிரதமரின் வருகைக்கு பிறகு நிறைய சுற்றுலா பயணிகள், ஆன்மிகவாதிகள் ஏராளமானோர் வருகை தருவார்கள்.
பிரதமரை சந்திப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தாரா என்பது எனக்கு தெரியாது. தமிழகத்தில் வறட்சி தொடங்கி விட்டது. எனவே, கோதாவரி- காவிரி நதிநீர் இணைப்பு பணியை நடத்த வேண்டும். விவசாய கடன் வழங்குவதற்கு சிபில் ஸ்கோர் கேட்பதில் இருந்து விவசாயிகளுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இன்னும் பாஜக தேசிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழகத்தில் மாநில பொறுப்பாளர்கள் இன்னும் முழுமையாக தேர்வு செய்யப்படவில்லை. அகில இந்திய அளவில் மாநில தலைவர்கள் மட்டும்தான் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இன்னும் நிறைய வேலைகள் இருக்கின்றன. நாங்கள் அனைவரும் சாதாரண தொண்டர்கள். பொறுப்பு கிடைத்தாலும், கிடைக்கவில்லை என்றாலும், எப்போதும் போல தான் வேலை செய்வோம்.
பொறுப்பு என்பது நிலையில்லாதது. மாறிக்கொண்டே இருக்கும். பொறுப்புக்காக எங்கள் வேலையை குறைத்துக் கொண்டோம், வேலை செய்ய மாட்டோம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கட்சி எனக்கு இன்னொரு பொறுப்பு கொடுத்து வேலை செய்ய சொன்னால் நான் செய்வேன். அது ஒரு வாரம், 15 நாட்கள் அல்லது ஒரு மாதம் கழித்தா என்பது எனக்கு தெரியாது.
திமுக ஆட்சி வந்து 4 ஆண்டுகள் முடிவடைந்து விட்டன. இந்த காலத்தில் தமிழகத்துக்கு என்ன செய்தார்கள் என்ற ரிப்போர்ட்கார்டை மக்களிடம் முதல்வர் கொடுக்க வேண்டும். எனவே, முதல்வர் இன்னும் சாக்குபோக்கு சொல்லாமல், மத்திய அரசின் மீது பழி போடாமல், அவரது சாதனைகளை பட்டியலிட வேண்டும். 511 தேர்தல் வாக்குறுதிகளில் எவ்வளவு நிறைவேற்றியுள்ளனர் என்பதை சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.