மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரியில் ரூ.172 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதால், வரும் மார்ச் மாதத்தில் பணிகள் நிறைவு பெறும் என நீர்வளத்துறை தெரிவித்துள்ள நிலையில், பணிகளை மேலும் தாமதப்படுத்தாமல் விரைவாக நிறைவு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாக மதுராந்தகம் ஏரி அமைந்துள்ளது. சுமார் 4,752 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியில் கொள்ளளவாக 24.30 அடி வரையில் தண்ணீர் சேமிக்க முடியும் என்ற நிலை உள்ளது. மேலும், ஏரியின் நீரை நம்பி மதுராந்தகம் வட்டத்தில் உள்ள கடப்பேரி, கத்திரிச்சேரி, மதுராந்தகம், வளர்பிறை, முள்ளி, முன்னூத்திக்குப்பம், விளாகம், முருக்கஞ்சேரி, விழுதமங்கலம் உட்பட 36 கிராமங்களில் மொத்தம் 2,853 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும், மதுராந்தகம் நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கிராமங்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு கடந்த 2021-ம் ஆண்டு ரூ.120 கோடி நிதி ஒதுக்கி ஏரியில் தூர்வாரும் பணிகளை நீர்வளத்துறை மூலம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக, கலங்களை உடைத்து ஏரியிலிருந்த நீர் வெளியேற்றப்பட்டது. இதனால், கடந்த 4 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், ஏரியின் சீரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஏரியில் கதவணை அமைக்கும் பணிகள் உட்பட சீரமைப்பு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: ஏரியின் சீரமைப்பு பணிகளால் கடந்த 4 ஆண்டுகளாக பாசனத்துக்கு தண்ணீரின்றி விவசாயம் செய்யாமல் உள்ளோம். இதனால், எங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏரி தூர்வாரப்படும் என அறிவித்த போது மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், தாமதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளால் விவசாயம் செய்ய முடியமால் வருவாய் பாதிக்கப்பட்டு சொல்ல முடியா துயரத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனினும், ஏரியை அதிகாரிகள் தூர்வாரவில்லை. மாறாக கரையை பலப்படுத்துதல் மற்றும் உபரிநீர் வெளியேற்றுவதற்கான மதகுகள் அமைக்கும் பணிகளையே பிரதானமாக மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு கூறினர்.
இதுகுறித்து, மதுராந்தகம் நகரப்பகுதி மக்கள் கூறியதாவது: ஏரியில் தண்ணீர் இல்லாததால், மதுராந்தகம் நகருக்கு குடிநீர் வழங்கும் ஆழ்துளை கிணறுகளில் நீர்சுரப்பு குறைந்துள்ளது. அதனால், நாள்தோறும் ஒரு மணி நேரம் மட்டுமே குழாய்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால், கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சுற்றுப்புற கிராமங்களிலும், இதேநிலைதான் காணப்படுகிறது.
இதனால், பெண்கள் காலி குடங்களுடன் குடிநீருக்காக தெருக்களில் சுற்றித்திரியும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், இனியும் பணிகளை தாமதப்படுத்தாமல் பணிகளை விரைவாக மேற்கொண்டு, ஏரியில் தண்ணீரை சேமித்து குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.
இதுகுறித்து, மதுராந்தகம் நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மதுராந்தகம் ஏரியில் கூடுதலாக நீரை சேமிக்கும் வகையிலும், வெள்ளப் பெருக்கின்போது அதிகளவிலான தண்ணீரை பாதுகாப்பாக வெளியேற்றும் வகையிலும் 144 மீட்டர் நீளத்துக்கு 12 ஷட்டர்களுடன் கூடிய மதகுகள் மற்றும் ஷெட்டர்களை திறந்து மூடுவதற்காக நவீன மோட்டார்கள் அமைக்கும் பணிகள் ரூ.52 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள், வரும் மார்ச் மாதம் நிறைவு பெறும்.
அதேபோல், ஏரியின் கரையில் தாழ்வாக உள்ள பாசன நிலங்களை மட்டப்படுத்தும் பணிகள் 70 சதவீதமும், 5 கலங்கல்களை மறு வடிமைப்பு செய்யும் கட்டுமான பணிகள் 95 சதவீதமும், ஏரியின் 6-வது நீர்போக்கியின் கட்டுப்படுத்தப்பட்ட ஷெட்டர்கள் பொருத்தும் பணி 90 சதவீதமும், பழுதடைந்த பாசன மதகு எண் 2-ஐ புதிதாக அமைப்பதற்கான கட்டுமான பணி 90 சதவீதமும் நிறைவடைந்துள்ளன.
மேலும் மதகு எண் 1,3, 4 ஆகியவற்றை புதுப்பிக்கும் பணிகள் 95 சதவீதமும் ஏரியின் நீர்வரத்து கால்வாய்களான நெல்வாய் மடுவு மற்றும் கிளியாற்று கால்வாய்களை தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணிகள் 95 சதவீதமும், ஏரியின் முன்பக்கம் அமைந்துள்ள 1,567 மீட்டர் நீளம்கொண்ட பழுதான தடுப்பு சுவற்றை புதிதாக வடிவமைத்து கட்டும் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இதனால், வரும் மார்ச் மாதம் பணிகள் நிறைவு நிலையில் உள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.