பொள்ளாச்சி: ‘தொழில் முதலீட்டை ஈர்க்காமல், தொழில் முதலீடு செய்யவே முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுக்கு சென்று வந்துள்ளார். தமிழகத்தில் 37 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறுவது பொய்’ என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப்பயணத்தை தொடங்கிய அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நேற்று மாலை பேசினார். கட்சியினர் அளித்த வரவேற்பைப் தொடர்ந்து பழனிசாமி பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்துள்ளார். தொழில் முதலீட்டை ஈர்க்க செல்லவில்லை. தொழில் முதலீடு செய்ய சென்றுள்ளார். இதுவரை 5 முறை ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளார்.
அந்த பயணத்தில் எவ்வளவு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது, எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது, எத்தனை தொழில்கள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன? ஒன்றும் கிடையாது. ஆனால், திமுக அரசு, 932 புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும், 10 லட்சம் கோடி தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும், 37 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளதாகவும், 77 சதவீதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் பொய் செய்தி வெளியிட்டுள்ளனர். அது உண்மையா? என நாங்கள் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை.
இளைஞர்களைக் கவர: மத்திய அரசு அறிக்கையின் படி, திமுக ஆட்சியில் 68 ஆயிரம் கோடிதான் தமிழத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மக்களை ஏமாற்றும் அரசாக ஸ்டாலின் மாடல் அரசு உள்ளது. 37 லட்சம் பேருக்கு வேலை கொடுத்ததாக தந்திரமாகப் பேசி இளைஞர்களின் வாக்குகளைப் பெற ஸ்டாலின் மாடல் அரசு பொய் கூறி வருகிறது. ஓசூரில் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தொழிற்சாலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட உள்ளனர்.
அதிமுக ஆட்சியில் பல நிறுவனங்கள் தமிழகத்துக்கு வந்தன. பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கினோம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2015-ல் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி ரூ.2.48 லட்சம் கோடி முதலீடு ஈர்த்தார். 2019-ல் அதிமுக ஆட்சியில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி முதலீடு ஈர்த்தோம். திமுக ஆட்சியின் நடவடிக்கை வெறும் ஏட்டளவில் தான் உள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது. போதைப்பொருள் விற்பனை குறித்து நாங்கள் எச்சரித்தபோது ஸ்டாலின் கண்டுகொள்ள வில்லை. பழனிசாமி ஆம்புலன்ஸ்களை தடுக்கிறார் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தவறான தகவல் வெளியிட்டுள்ளார். நான் செல்லும் இடங்களில் எனது பேச்சை கேட்க, பல ஆயிரம் மக்கள் திரண்டுள்ளீர்கள். நீங்கள் பாதுகாப்பாக திரும்பிச் செல்ல வேண்டும்.
உங்கள் மீது ஆம்புலன்ஸ் மோதிவிட்டால் யார் பொறுப்பு. நான் பேச்சை தொடங்கிய 10, 20 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்து, மக்கள் கவனத்தை திசை திருப்பி இடையூறு செய்கின்றனர். இக்கூட்டத்தை இடையூறு செய்வதற்காக திமுக செய்யும் தந்திரம் இது. தைரியம் இருந்தால் நேரடியாக மோத வேண்டும். அதை விட்டு, ஆம்பு லன்ஸ் மூலம் நாடகத்தை அரங் கேற்றுகின்றனர்.
மக்கள் முடிவு செய்துவிட்டனர்: கெடுதல் செய்து அதிமுகவை பணிய வைக்க ஒருபோதும் முடியாது. திமுக தற்போது ஐசியூ-வில் உள்ளது. இன்னும் 7 மாதத்தில் திமுக அதிகாரத்தை மக்கள் பறிக்கப் போகின்றனர்.அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டனர். திமுக ஆட்சியில் தமிழகம் தினமும் போராட்ட களமாகி விட்டது. எல்லா துறையிலும் ஊழல் மலிந்து விட்டது.
டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் விற்பனை மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 22 ஆயிரம் கோடி மேலிடத்துக்கு சென்றுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி, பொள்ளச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ, செ.தாமோதரன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.