‘மக்களைக் காப்போம், தமிழகம் மீட்போம் எழுச்சிப் பயணம்’ என்ற பெயரில் கடந்த ஜூலை 7-ஆம் தேதி தமிழகம் தழுவிய சுற்றுப் பயணத்தை தொடங்கிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 34 நாட்களில் 100 தொகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்துள்ளார்.
கோவை மேட்டுப்பாளையம் தொகுதியில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கிய இபிஎஸ், 100-வது தொகுதியாக ஆற்காட்டை எட்டியுள்ளார். மேற்கு மண்டலத்தில் பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, வடக்கு மண்டலம், மத்திய மண்டலம், தென் மண்டலம் என 34 நாட்களில் 10,000 கிலோமீட்டர் பயணித்து 100 தொகுதிகளில் மக்களை சந்தித்துள்ளார்.
சுற்றுப் பயணத்துக்காக வடிவமைக்கப்பட்ட பேருந்தில் இருந்தபடி மக்களை சந்தித்து வரும் இபிஎஸ், ஒவ்வொரு தொகுதிக்கும் செல்லும்போது, விவசாயிகள், வியாபாரிகள், நெசவாளர்கள், மீனவர்கள் உள்ளிட்டோரிடம் 150-க்கும் மேற்பட்ட கலந்துரையாடல்களில் பங்கேற்று அவர்களின் பிரச்சினைகளையும் நேரடியாகக் கேட்டுள்ளார்.
சுற்றுப் பயணம் தொடர்பாக அதிமுக தரப்பில் வெளியான புள்ளிவிவரங்களில், இதுவரை 52 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் இபிஎஸ் நேரடியாக சென்று பேசியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து பயணத்தை தாண்டி, நேரடியாகவும் பல இடங்களில் அவர் மக்களை சந்தித்து பேசினார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்தச் சுற்றுப்பயணம் முதலில் அதிமுகவினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது என்பதே உண்மை. அதேபோல, ‘அதிமுக மக்கள் பிரச்சினைகளை கண்டுகொள்வதில்லை, இபிஎஸ் மக்களை சந்திப்பதில்லை’ என எதிர்க்கட்சிகள் வைத்த விமர்சனங்களையும் இந்த சுற்றுப்பயணம் மூலமாக உடைத்தெறிந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதனையே தங்களின் பெரிய வெற்றியாக பார்க்கின்றனர் அதிமுகவினர்.
இபிஎஸ் சுற்றுப் பயணம் செய்யவுள்ள ஊர்களில் பெருமளவில் அதிமுகவினர் குவிகின்றனர். எதிர்க்கட்சியாக இருக்கிறோமே கூட்டம் கூடுமோ இல்லையோ என சந்தேகம் முதலில் அதிமுகவினருக்கே இருந்தது. ஆனால், ஒவ்வொரு தொகுதியிலும் திரண்ட கூட்டம், அதிமுகவின் அடிமட்டம் வரையிலான கட்டமைப்பு இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை நிரூபித்தது. அதேபோல மண்டலம், மாவட்டம், தொகுதி, ஒன்றியம், கிளை வாரியாக உரிய பொறுப்பாளர்களை நியமித்து இந்த சுற்றுப் பயணத்துக்காக முறையாக திட்டமிட்டுள்ளனர். அதன் விளைவாகவே ஒவ்வொரு தொகுதியிலும் பிரமாண்டமான கூட்டம் என்பது சாத்தியமானது.
தனது சுற்றுப்பயணத்தில் பேசும்போது இபிஎஸ் நான்கு விஷயங்களை பிரதானப்படுத்துகிறார். ஒன்று, திமுக ஆட்சியின் இன்றைய அவலங்கள். இரண்டு, திமுக ஆட்சி நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகள். மூன்றாவது, அதிமுக ஆட்சியின் கடந்த கால சாதனைகள். நான்காவதாக, 2026 தேர்தலுக்கான வாக்குறுதிகள். இவை நான்குமே அதிமுகவினரை தாண்டி பொதுத்தளத்தில் பேசுபொருளாகியுள்ளது என்பதே உண்மை.
இபிஎஸ் தனது பிரச்சாரத்தில், திமுக ஆட்சியின் இப்போதைய குறைகளை முன்னிலைப்படுத்துகிறார். முக்கியமாக, ஆட்சி நிர்வாகம் தொடங்கி, சினிமா துறை வரை அனைத்தும் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று தொடர்ந்து பேசுகிறார். அடுத்ததாக, திமுக அரசு நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும் பேசுகிறார்.
அதேபோல, அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தாலிக்குத் தங்கம், விவசாயிகளுக்கான நிவாரணம், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு, இலவச லேப்டாப், அம்மா உணவகம், அம்மா கிளினிக், இருசக்கர வாகன மானியம், இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டம், பொங்கலுக்கு ரூ.2,500, விவசாயக் கடன் ரத்து என பல்வேறு திட்டங்களை அடுக்குகிறார்.
குறிப்பாக, 2026 தேர்தலுக்காக அவர் பல்வேறு முக்கிய வாக்குறுதிகளையும் அளிக்க தொடங்கியுள்ளார். அதன்படி தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்குவோம் எனத் தெரிவித்துள்ளார். இது பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், பொங்கலுக்கு மீண்டும் ரூ.2,500, இலவச வேட்டி சேலை, தீபாவளிக்கு சேலை, ஏழைகளுக்கு காங்கிரீட் வீடுகள், கோரைப்பாய் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளையும் கொடுத்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த சுற்றுப் பயணம் அதிமுகவினரை தாண்டி, பொதுமக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது உண்மை என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். முக்கியமாக, அதிமுக ஒன்றும் சோர்ந்துவிடவில்லை என்பதை, ஒவ்வொரு தொகுதியிலும் கூடும் கூட்டம் மூலமாக பொதுமக்களுக்கும், ஆளும் திமுகவுக்கு அழுத்தமாக சொல்லியுள்ளார் இபிஎஸ். ஆற்காட்டில் 100-வது தொகுதி பயணத்தை நிறைவு செய்த இபிஎஸ், “இந்தப் பயணம் துவக்கம் மட்டுமே” என்று சொல்லியிருப்பதும் கவனிக்கத்தக்கது.