திருச்சி: நாமக்கல் மற்றும் கரூர் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தவெக தலைவர் விஜய் தனிவிமானம் மூலம் இன்று காலை திருச்சி வந்தடைந்தார்.
கடந்த செப்.13-ம் தேதி சனிக்கிழமையன்று தவெக தலைவர் விஜய் திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார். திருச்சியில் துவங்கி அரியலூரில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். கடந்த சனிக்கிழமை நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் மூன்று சொகுசு கார்கள் அவருக்காக நின்றிருந்தன. அதில் கருப்பு கலர் பார்ச்சூன் காரில் அவர் ஏறினார்.
மற்ற இருகார்களில் அவரது பாதுகாவலர்கள், பவுன்ஸர்கள் சென்றனர். திருச்சியில் இருந்து சாலைமார்க்கமாக நாமக்கல் செல்லும் விஜய், அங்கு பிரச்சாரம் மேற்கொள்கிறார். மாலை கரூரில் பிரச்சாரம் செய்கிறார். மீண்டும் திருச்சி விமான நிலையத்திற்கு இன்றிரவு 9 மணியளவில் வரும் தவெக தலைவர் விஜய், தனிவிமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.
போலீஸ் உஷார்: விமான நிலையத்தில் இருந்து டிவிஎஸ் டோல்கேட், சென்னை பைபாஸ் சாலை, நம்பர் ஒன் டோல்கேட், முசிறி, தொட்டியம் வழியாக நாமக்கல் பிரச்சார இடத்திற்கு சாலை மார்க்கமாக விஜய் செல்கிறார். அவரது காரை யாரும் வழிமறித்து விடக்கூடாது என்பதற்காக முன்பும், பின்பும் போலீஸ் எஸ்கார்ட் வாகனங்கள் சென்றன.
மேலும், தவெக தொண்டர்கள், பொதுமக்கள் திருச்சி விமான நிலையத்திற்குள் நுழையாத வகையில், நுழைவுவாயிலேயே மாநகர போலீஸாரும், மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரும் சோதனையில் ஈடுபட்டனர். விமானப் பயணிகள், அவர்களை சார்ந்தவர்களை தவிர மற்றவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டனர்.