கரூர்: கரூர் சம்பவத்துக்கு பொறுப்பேற்காமல் 3 மணி நேரம் கழித்து ட்வீட், 3 நாள் கழித்து வீடியோ வெளியிடுபவர் தலைவரா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி கேள்வி எழுப்பினார்.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் எம்.ஏ.பேபி மற்றும் எம்.பி.க்கள் ராதாகிருஷ்ணன், சிவதாசன், சச்சிதானந்தம், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகி, எம்எல்ஏ நாகை மாலி கொண்ட குழுவினர் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர், எம்.ஏ.பேபி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த விவகாரத்தில் விரைந்து செயல்பட்ட தமிழக அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. தமிழக முதல்வர் இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக அணுகாமல், இரவோடு இரவாக நேரில் வந்து உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இங்கு நடந்த சம்பவம்போல இனி எங்கும் நடைபெறக்கூடாது. 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கூட்டத்தை ஒழுங்குபடுத்தவோ, கட்டுப்படுத்தவோ கட்சியினர் தவறிவிட்டனர். 7 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்ததால் முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் தண்ணீர், உணவு எதுவுமின்றி சோர்வடைந்துள்ளனர். இதில் சிபிஐ விசாரணை தேவையில்லை. கூட்டம் அதிகமானால் அதைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமை, சம்பந்தப்பட்ட கட்சித் தலைவருக்கு உண்டு.
அவர்தான் சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். சம்பவம் நடந்த 3 மணி நேரம் கழித்து ட்வீட் செய்து, 3 நாள் கழித்து வீடியோ வெளியிடுபவர் தலைவராக இருக்க முடியாது. ஒரு துயர சம்பவம் நடந்திருக்கும்போது, அங்கு சென்று உதவி செய்திருக்க வேண்டும். யார் மீதும் குற்றம் சுமத்துவது, தண்டனை வழங்குவது நோக்கமல்ல. எதிர்காலத்தில் இதுபோல நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.