சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு தினத்தையொட்டி அவரது படத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிலையில், காங்கிரஸ் கட்சியினர் அன்னதானம் வழங்கினர்.
நடிகர் சிவாஜி கணேசனின் 24-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் சிவாஜியின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, அதன் அருகே அவரது படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
சிவாஜி கணேசனின் மகனும், நடிகருமான பிரபு, அவரது மகன் விக்ரம் பிரபு உடன் வருகை தந்து சிவாஜி கணேசனின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பாஜக மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் மரியாதை செலுத்தினார்.
சிவாஜி கணேசனின் நினைவு தினத்தை முன்னிட்டு சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பில் சிறப்பு அன்னதானமும் சத்திய மூர்த்தி பவனின் நேற்று வழங்கப்பட்டது.
இதற்கிடையே சிவாஜி கணேசனின் நினைவுதினம் குறித்து அரசியல் தலைவர்கள் வெளியிட்ட செய்திகளில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: நடிப்பின் இலக்கணம், தான் ஏற்றக் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்த திரை ஆளுமை சிவாஜி கணேசனின் நினைவு நாளில், தமிழ்த் திரையுலகில் அவர் நிகழ்த்திய காலத்தால் அழியா சாதனைகளை நினைவுகூர்கிறேன்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: இந்திய விடுதலைக்கு பிறகு சுதந்திரப் போராட்டத்தில் நம்முடைய முன்னோர்கள் செய்த தியாகத்தை அடுத்த தலைமுறைகளுக்கு திரையின் மூலம் வெளிப்படுத்திய மாபெரும் கலைஞர் சிவாஜி கணேசனின் நினைவை இந்நாளில் போற்றுவோம்.’
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை: கலைத்திறமையால் தமிழ்த் திரைகை உலக அளவில் கொண்டு சேர்த்தவர், விருதுகளுக்கு பெருமை சேர்த்த சிம்மக் குரலோன் சிவாஜி கணேசனின் நினைவை போற்றி வணங்குவோம்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம் சிவாஜி கணேசன். தன்னிகரற்ற நடிப்பாற்றலால் தமிழர்களின் கலைத்திறனை தரணிக்கு காட்டிய தனிப்பெருங்கலைஞன் பெரும் புகழை போற்றுவோம்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: உடல்மொழியாலும், உணர்வுப்பூர்வமான வசன உச்சரிப்பாலும் நாட்டு மக்கள் மனதில் தனக்கென தனி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் நடிப்பு சக்கரவர்த்தி சிவாஜி கணேசனை எந்நாளும் நினைவில் வைத்து போற்றுவோம்.