சென்னை: தமிழகத்தில் உள்ள 2,236 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்க்கடிக்கான மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை மேற்கு மாம்பலம், மேட்டுப்பாளையம் எத்திராஜ் நகரில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மிகப்பெரிய அளவில் மக்களை ஈர்த்திருக்கிறது. ஜூலை 15 முதல் நவ.14-ம் தேதி வரை 10 ஆயிரம் முகாம்கள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை தமிழகம் முழுவதும் 7,427 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் 55.55 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சென்னையில் இதுவரை 323 முகாம்கள் நடைபெற்று, 5.45 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
கடந்த 2010-11-ம் ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சி 13.12 சதவீதமாக இருந்தது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு, திமுக அரசு மீண்டும் பொறுப்பேற்ற பின், இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழகம் மீண்டும் பெற்றுள்ளது. நாய் இனப் பெருக்கத்தை குறைப்பது குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
நாய்க்கடி, பாம்புக்கடிக்கான மருந்து என்பது வட்டார, மாவட்ட அளவிலான மருத்துவமனைகளில் மட்டுமே இருந்து வந்த நிலையில் இன்றைக்கு தமிழகத்தில் 2,236 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்க்கடிக்கும், பாம்புக்கடிக்கும் மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் எம்.ஸ்ரீதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.