சென்னை: அதிமுக 210 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி சொல்வது அவரது கனவு என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடக்கிறது. இதற்காக தமிழக எம்.பி.க்கள் சென்னையில் இருந்து விமானங்கள் மூலம் நேற்று டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர். முன்னதாக, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது: குடியரசு துணைத் தலைவர் எதற்காக திடீரென ராஜினாமா செய்தார் என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடக்கிறது.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அத்தனை எதிர்க்கட்சிகளும் சேர்ந்து, ஒரு வேட்பாளரை நிறுத்தி இருக்கிறோம். ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாடு தள்ளப்பட்டுள்ளது. எங்கள் வேட்பாளரை வெற்றி பெற செய்ய உழைத்துக் கொண்டு இருக்கிறோம்.
அதிமுக பொதுச்செயலாளர் 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறியிருப்பது, அவருடைய கனவு. அந்த கனவில்கூட சில தொகுதிகளை எதிர்க்கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறார். பழனிச்சாமியின் கனவு நிறைவேறாத கனவாகத் தான் முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.