திருப்பூர்: உடுமலை அருகே கொல்லப்பட்ட எஸ்எஸ்ஐ சண்முகவேலுவின் உடலுக்கு காவல் துறை சார்பில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து எடுத்து வரப்பட்ட அவரது உடல், உடுமலை தாராபுரம் சாலையில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் அங்கு வந்த காவல் துறை தலைவர் சங்கர் ஜிவால், சண்முகவேலுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் சண்முகவேலின் மனைவி மற்றும் மகனை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதன்பின் சங்கர் ஜிவால், காவல் துறை கூடுதல் இயக்குநர் டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆகியோர் சண்முகவேலுவின் உடலை தூக்கிச் சென்று ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றினர். மின் மயானத்தில் காவல் துறை கூடுதல் இயக்குநர் டேவிட்சன் தேவாசிர்வாதம் முன்னிலையில் போலீசார் 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர், சண்முகவேலின் உடல் தகனம் செய்யப்பட்டது.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், எம்எல்ஏக்கள் ராதாகிருஷ்ணன் (உடுமலை), சி.மகேந்திரன் (மடத்துக்குளம்) முன்னாள் எம். எல்.ஏ.க்கள் ஜெயராமகிருஷ்ணன், சண்முகவேலு உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், காவல் துறையினர், போலீசார் உட்பட ஏராளமானோர் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.