புதுச்சேரி: புதுச்சேரியில் ஜூலை 9-ம் தேதியில் தொழிற்சங்கங்கள் கூட்டாக பந்த், 8 இடங்களில் மறியல் போராட்டங்களை அறிவித்துள்ளனர். அன்றைய தினம் பேருந்து, ஆட்டோ இயங்காது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி முதலியார்பேட்டை ஏஐடியூசி அலுவலகத்தில் தொழிற்சங்கத்தினர் கூட்டாக செய்தியாளர்களை இன்று சந்தித்தனர். இச்சந்திப்பில் ஏஐடியூசி பொதுச் செயலாளர் சேது செல்வம் கூறியதாவது: தொழிலாளர்கள், விவசாயிகள், மக்கள் விரோத மத்திய மோடி அரசை கண்டித்தும், 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் வரும் ஜூலை 9ம் தேதி புதுச்சேரியில் வேலை நிறுத்தம் பந்த் நடத்துகிறோம். அன்றைய தினம் தொழிற்சங்கங்கள் கூட்டாக புதிய பேருந்து நிலையம், அரியாங்குப்பம், வில்லியனூர், பாகூர், மதகடிப்பட்டு, திருக்கனூர், சேதராப்பட்டு, காரைக்கால் ஆகிய 8 மையங்களில் மறியல் போராட்டம் நடத்தவுள்ளோம்.
புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக ரூ.26 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்பவும் அமுலாக்க வேண்டும். புதுவையில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தை உரிய நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும்.
மூடப்பட்டுள்ள பஞ்சாலைகள் மற்றும் செயல்படாமல் உள்ள பாசிக், பாப்ஸ்கோ போன்ற அரசு சார்பு நிறுவனங்களை திறந்து திறன்பட நடத்தி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது உட்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பந்த் போராட்டம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் பேருந்துகள், ஆட்டோக்கள், டெம்போக்கள் ஓடாது.
பேருந்து, ஆட்டோ இயங்காமல் குழந்தைகள் பள்ளி, கல்லூரிக்கு செல்வது கடினம் என்பதால் அன்றைய தினம் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். மேலும், ஜூலை 9ம் தேதி திரையரங்குகள், மார்க்கெட், கடைகள் இயங்காது. தொழிற்சாலைகள், அரசு சார்பு நிறுவனங்கள் வேலை நிறுத்த நோட்டீஸை முறைப்படி வழங்கப்பட்டுள்ளது என்று சேதுசெல்வம் கூறியுள்ளார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில், சிஐடியூ செயலாளர் சீனுவாசன், ஐஎன்டியூசி பொதுச் செயலாளர் ஞானசேகரன், எல்பிஎப் மாநில அமைப்பாளர் அண்ணா அடைக்கலம், ஏஐசிசிடியூ பொதுச் செயலாளர் புருஷோத்தமன், எல்எல்எப் செயலாளர் தங்க கதிர்வேல், எம்எல்எப் செயலாளர் வேதா வேணு கோபால், என்டிஎல்எப் செயலாளர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.