சென்னை: “வரும் 2030-ம் ஆண்டுக்குள் சூரியசக்தி மின்னுற்பத்தி 50 ஆயிரம் மெகாவாட் அளவை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள், “சுற்றுச்சூழலைப் பாதிக்காத காற்றாலை, சூரியசக்தி ஆகியவற்றை உள்ளடக்கிய பசுமை எரிசக்தியை பயன்படுத்துமாறு மாநில அரசுகளை, மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதன்படி, தமிழக அரசு பசுமை எரிசக்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, சூரியசக்தி மின்னுற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது சூரியசக்தி மின்னுற்பத்தி நிறுவுதிறன் 10 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது.
எனினும், 12 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு நிறுவுதிறன் அமைப்பதற்கான போதிய இடவசதி உள்ளது. ஒரு மெகாவாட் சூரியசக்தி மின்னுற்பத்தி நிலையம் அமைக்க குறைந்தபட்சம் 3 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. மேலும், காற்றாலை மின்னுற்பத்தி செய்வதற்கு, காற்றாலை சீசன் ஒருசில மாதங்கள் மட்டுமே நிலவுவதால், அதை விட சூரியசக்தி மின்னுற்பத்தி ஓராண்டில் அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது.
அத்துடன், சூரியசக்தி மின்னுற்பத்திக்கான செலவு குறைவாக இருப்பதோடு, சுற்றுச்சூலை பாதிக்காத வகையிலும் உள்ளது. எனவே, சூரியசக்தி மின்னுற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வரும் 2030-ம் ஆண்டுக்குள் 50 ஆயிரம் மெகாவாட் சூரியசக்தி மின்னுற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பேட்டரி மூலம் சேமித்து வைப்பதற்கான பேட்டரி ஸ்டோரேஜ் வசதியையும் ஏற்படுத்தப்பட்ட உள்ளது. முதற்கட்டமாக, 4 ஆயிரம் மெகாவாட் சூரியசக்தி மின்சாரத்தை பேட்டரி மூலம் சேமித்து வைப்பதற்கான ஸ்டோரேஜ் வசதி ஏற்படுத்தப்படும்.” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.