கரூர்: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிக் கணக்கை கரூரில் இருந்து தொடங்குவோம் என திமுக முப்பெரும் விழாவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ தெரிவித்தார். கரூர் கோடங்கிபட்டியில் திமுக முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ வரவேற்றுப் பேசியது: 2026 சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு முதல்வரின் வருகை கட்டியம் கூறும். 2026 தேர்தல் வெற்றிக் கணக்கை கரூரில் இருந்து தொடங்குவோம். வரும் தேர்தலில் நாம் தான் வெற்றிபெறுவோம்.
நாம் மட்டும் தான் வெற்றிபெறுவோம் என்றார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “இந்த முப்பெரும் விழா திமுக வரலாற்றில் இடம்பெறும். தலைவர் முதன் முதலில் போட்டியிட்டு வென்ற தொகுதி அமைந்துள்ள கரூர் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளையும் வரும் சட்டப்பேரவை தேர்தலில் கைப்பற்றுவோம்” என்றார்.
விருது பெற்ற கனிமொழி எம்.பி. பேசுகையில், “இந்த பிரம்மாண்ட முப்பெரும் விழா மூலம் இந்தியாவின் பார்வையை கரூர் நோக்கி திருப்பியுள்ளார் முதல்வர். நமது பரம்பரை பகைவர்கள், பாரம்பரிய பகைவர்கள் அத்தனை பேரையும் வென்று காட்டுவோம்” என்றார். விழா மேடைக்கு முதல்வர் வந்த சில நிமிடங்களில் மழை பெய்யத் தொடங்கியது. ஆனாலும், தொண்டர்கள் மழையில் நனைந்தபடியும், நாற்காலிகளை குடைபோல் தலைகீழாக தூக்கிப் பிடித்துக் கொண்டும் நின்றனர்.