சேலம்: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில் சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று நடைபெற்றது. அதிமுகவில் இணைந்தவர்களை வரவேற்று கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது: அதிமுக ஆட்சியில் சேலம் மாவட்டம் முழுவதும் சாலை, தடுப்பணைகள் மற்றும் பல்வறு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன. தற்போது சேலத்தில் நெசவுத் தொழில் நலிவடைந்துள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டுமென மக்கள் எதிர்பார்த்துள்ளனர். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நெசவுத் தொழில் வளர்ச்சிக்கு உதவுவோம்.
அதிமுக ஆட்சியில் மேட்டூர் அணையிலிருந்து 100 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டம் தொடங்கப்பட்டு, 6 ஏரிகளுக்கு நீர் கொண்டு வரப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் இந்தப் பணிகள் மெதுவாக நடக்கின்றன. அதிமுக திட்டம் என்பதால் இதை திமுக அரசு கண்டுகொள்ளவில்லை. பல ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடையும் வகையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். இவ்வாறு பழனிசாமி பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறும்போது, “தமிழக மக்கள் எம்ஜிஆரை தெய்வமாக பார்க்கின்றனர். அவரை விமர்சித்தால், அரசியலில் காணாமல் போய்விடுவார்கள். அதிமுக சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டது. திமுக கூட்டணிக் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால், தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளதால், அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும்” என்றார்.