மதுரை: ‘‘வரும் 2026 ஜனவரி பொங்கல் பண்டிகை முதல் மதுரை தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரி செயல்பட தொடங்கும்’’ என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான ஹனுமந்தராவ் தெரிவித்தார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தோப்பூரில் மும்முரமாக நடக்கிறது. சமீபத்தில் மருத்துவமனை கட்டிடத்தின் 3டி வீடியோ வெளியாகி, பொதுமக்களை திரும்பிப் பார்க்க வைத்தது. ஆனால், ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரி, இன்னும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடத்தில் செயல்படுகிறது. அந்தக் கல்லூரியை மதுரைக்கு கொண்டு வரவும், அதற்கான கட்டிட வசதியை ஏற்பாடு செய்யவும், மதுரை ‘எய்ம்ஸ்’ நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது.
இந்நிலையில், மதுரை ‘எய்ம்ஸ்’ தலைவர் பிரசாந்த் லவானியா தலைமையில் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை மதுரை தோப்பூர் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவன (எய்ம்ஸ்) வளாகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மதுரை ‘எய்ம்ஸ்’ நிர்வாக அதிகாரி ஹனுமந்தராவ், விருதுநகர் எம்பி மாணிக் தாகூர், தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார், அதிமுக ராஜ்யசபா எம்பி சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். ‘எய்ம்ஸ்’ மத்திய துணை செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் 8 பேர், ஆன்லைன் மூலம் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் நடந்த இக்கூட்டத்தில் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை மற்றும் அதில் இயங்கப்போகும் கல்லூரிகள், தற்போது நடைபெற்று வரும் ‘எய்ம்ஸ்’ கட்டுமானப்பணிகள் பற்றி விவாதித்துள்ளனர்.
கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எய்ம்ஸ் நிர்வாக அதிகாரி ஹனுமந்தராவ், ‘‘எய்ம்ஸ் நான்காவது ஆண்டு மாணவர் சேர்க்கை நிறைவு பெற்று ராமநாதபுரத்தில் மாணவர்கள் படித்து வருகிறார்கள். அங்கு போதிய வசதிகள் இல்லை. மேலும், அதற்கான வாடகைக்கு கட்டிடங்கள் எடுக்கக்கூடிய சூழ்நிலையும் தற்போது அங்கு இல்லை. தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டிட பணி தொடங்கப்பட்டு பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இன்று கூட ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை வளாகத்தில் நடக்கக்கூடிய பணிகள் குறித்து ஆய்வு செய்தோம்.
தற்போது தோப்பூரில் மருத்துவக் கல்லூரிக்கான கட்டிடப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. அதனால், வரும் 2026 ஜனவரி மாதம் தைபொங்கல் தினத்தன்று ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரி மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி புதிய கட்டிடத்தில் செயல்படும். இதன் காரணமாக ஜனவரி மாதத்திற்குள் மருத்துவக் கல்லூரிக்கு தேவையான ஆய்வகங்கள், கல்லூரியில் தங்கிப்படிக்கும் மாணவர்களுக்கான வசதிகள் மற்றும் முதற்கட்டமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 150 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்வதற்கு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. 2027 ஆம் ஆண்டுக்குள் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை பணிகள் நிறைவு பெற்று முழுமையாக செயல்பட தொடங்கும். மாதந்தோறும் கட்டிடப் பணிகள் குறித்த புகைப்படங்களை வெளியிடும்படி ஒப்பந்த நிறுவனத்திடம் தெரிவித்துள்ளோம்’’ என்றார்.