திருச்சி: திருச்சியில் ஏற்கெனவே 2 இடங்களில் டி-மார்ட் கார்ப்பரேட் நிறுவனக் கிளைகள் இயங்கி வரும் நிலையில், வயலூர் சாலையில் 3-வது கிளை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
சில்லறை வணிகத்தை அச்சுறுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டித்து, டி-மார்ட் கிளை அமைய உள்ள வயலூர் சாலை வாசன் வேலி பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நேற்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. அமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு மற்றும் நிர்வாகிகள், வணிகர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் விக்கிரமராஜா கூறியதாவது: தமிழக முதல்வர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய பிறகு, அவரை சந்தித்து டி-மார்ட் நிறுவனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுப்போம். அதன் பின்னர் பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு, தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்த கடைகளையும் மூடக்கூடிய நிலையை ஏற்படுத்துவோம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது, வால்மார்ட் கட்டிடத்துக்கு சீல் வைத்து, எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றினார். சாதாரண வணிகர்களின் நலன் காக்க, வணிகர் நல வாரியத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கி தந்தார்.
எனவே, தமிழக முதல்வர் ஸ்டாலினும், வியாபாரிகளைப் பாதுபாதுகாக்க நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தப் போராட்டம் வெற்றி பெறவில்லை என்றால், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து, ஆதரவு கேட்க முடிவு செய்துள்ளோம்.
தொடர்ந்து, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.