அரக்கோணம்: தமிழகத்தில் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என திமுக தலைவர் ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவியின் மகன் திருமண விழா தக்கோலத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பழனிசாமி பேசியதாவது:முக்கிய கட்சிகள் இணையும் அதிமுகவுடன் பல்வேறு கட்சிகள் கூட்டணியில் உள்ளன. விரைவில் முக்கிய கட்சிகள் இந்தக் கூட்டணியில் இணைய உள்ளன.
திமுக தலைவர் ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம், வரும் சட்டப்பேரவை தேர்தலில் 200 இடங்களில் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று கூறிவருகிறார். அவர் பகல் கனவு காண்கிறார். மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்று, அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்.
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை, திமுக அரசு முடக்கி உள்ளது. திமுக அரசு இதுவரை எந்த திட்டத்தையும் புதிதாக கொண்டுவரவில்லை. ஏற்கெனவே அதிமுக அறிவித்த திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் ஊழலும், முறைகேடுகளும் அதிகரித்துள்ளன. 2026 சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு, அதிமுகவினர் சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.