புதுச்சேரி: 20 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாததால், புதுவை, காரைக்கால் அரசு கல்லூரி உதவி பேராசிரியர்கள் பேரணியாக சென்று ஆளுநர் மாளிகையில் மனு அளித்தனர்.
புதுவை அரசு கல்லூரி பேராசிரியர்கள் கூட்டுப் போராட்டக் குழு சார்பில் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி அருகே புறப்பட்ட பேரணிக்கு குழுவின் தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். செயலர் சங்கரய்யா முன்னிலை வகித்தார். பேரணி அஜந்தா சிக்னல், மிஷன் வீதி, நேரு வீதி வழியாக ராஜ்நிவாஸை அடைந்தது. அங்கு கோரிக்கை மனு அளித்தனர்.
இந்தப் பேரணியில் புதுவை, காரைக்காலைச் சேர்ந்த பல்வேறு அரசு கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர். இதேபோல் ஏனாமில் உள்ள அரசு கல்லூரி பேராசிரியர்கள் அங்கு வாயில் முழக்க போராட்டம் நடத்தினர்.
நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் சூழலில் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி புதுச்சேரியில் பேரணி நடத்தியதாக பேராசிரியர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் கூறியது: “புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் அரசு கல்லூரிகளுக்கு உரிய உதவி பேராசிரியர்களை, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) விளம்பரம் செய்து, நேர்காணல் செய்து, தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து அனுப்புகிறது.
இவ்வாறு யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் கடந்த 2002 முதல் 2018 வரை தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டுள்ள உதவி பேராசிரியர்களுக்கு, கடந்த 20 ஆண்டுகளாக புதுவை அரசால் பதவி உயர்வு, ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.
ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டும் இதுதொடர்பாக பல ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இல்லை. 6-வது ஊதியக்குழுவின் ஊதியமே இன்னும் உயர்கல்வித்துறையில் அமல்படுத்தப்படவில்லை. மேலும் யுபிஎஸ்சி 2018-ல் வெளியிட்ட அறிக்கையினையும் இன்னும் புதுவை அரசு வெளியிடவில்லை.
கோரிக்கை பரிசீலிக்கப்படாததால் உதவி பேராசிரியர்களாக பணியில் இணைந்தவர்களில் சிலர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி உதவி பேராசிரியர்களாகவே ஓய்வுபெற்று வருகின்றனர். உதவி பேராசிரியர் என்ற நிலையில் பணியில் இருப்பவர்களின் ஊதியங்கள், குறிப்பிட்ட ஆண்டுகளில் படிப்படியாக உயர்த்தப்பட்டு, இணைப்பேராசிரியர்களாக பணி உயர்த்தப்பட வேண்டும் என்பது பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விதியாகும்.
கல்லூரி பேராசிரியர்களுக்கு உரிய ஊதியத்தை, பல்கலைக்கழக மானிய குழுவிலிருந்து (யூஜிசி) புதுவை அரசு பெற்றுக்கொண்டு, அதனை உரிய காலத்தில் உதவி பேராசிரியர்களுக்கு வழங்காமல், அந்தப் பணத்தை வேறு திட்டங்களுக்குத் திருப்பி விடுகின்றனர்.
எங்களுக்கு சேர வேண்டிய ஊதியம் கிடைக்காமல் பல ஆண்டுகளாக பணியாற்றுவதால், சில உதவி பேராசிரியர்கள் நீதிமன்றத்தை அணுகி, ஊதிய சிக்கலுக்குத் தீர்வு காண முனைந்துள்ளனர். நீதிமன்ற உத்தரவுகளையும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளையும் புதுவை அரசின் உயர்கல்வித் துறை கண்டுகொள்வதில்லை. இதையடுத்து இப்போராட்டத்தை நடத்தினோம்” என்றனர்.