சென்னை: அந்தமானில் மோசமான வானிலை நிலவியதால் 174 பயணிகளுடன் சென்ற விமானம் மீண்டும் சென்னை வந்து தரையிறங்கியது. சென்னையிலிருந்து 174 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அந்தமானுக்கு நேற்று காலை 7.25 மணிக்கு புறப்பட்டது. காலை 9.30 மணியளவில் அந்தமான் வான்வெளியில் விமானம் சென்றது.
அந்தமான் விமான நிலைய பகுதியில் தரைக்காற்று அதிகமாக வீசியதால் ஏற்பட்ட மோசமான வானிலையால், விமானத்தை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை விமானி தொடர்பு கொண்டார். உடனடியாக விமானத்தை சென்னைக்கு திருப்பிக் கொண்டு வருமாறு கட்டுப்பாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி, விமானி அந்தமான் வான்வெளியில் இருந்து விமானத்தை திருப்பி வந்து பகல் 11.40 மணியளவில் சென்னையில் தரையிறக்கினார்.
மாலை வரை அந்தமானில் வானிலை சீராகாததால், விமானம் ரத்து செய்யப்படுவதாகவும், நாளை (இன்று) விமானம் அந்தமான் புறப்பட்டு செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் சென்னையில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.