விழுப்புரம்: பாமக செயல் தலைவர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நீக்குவதாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தன் மீதான 16 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பாமக இளைஞர் சங்கத் தலைவராக தனது பேரன் முகுந்தன் (காந்தியின் மகன்) நியமிக்கப்படுவதாக நிறுவனர் ராமதாஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுவில் அறிவித்தார். இதற்கு, மேடையிலேயே கட்சித் தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேஜை மீது மைக்கை தூக்கி வீசினார். இதன்பிறகு, தந்தை – மகன் இடையே மோதல் தீவிரமடைந்தது.
கடந்த ஏப்ரல் 10-ம் தேதி கட்சித்தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அறிவித்த ராமதாஸ், தலைவர் பொறுப்பை கூடுதலாக தானே ஏற்றுள்ளதாகவும், அன்புமணியை செயல் தலைவராக நியமிப்பதாகவும் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, ‘தாய் மீது பாட்டிலை வீசினார், தலைமை பண்புக்கு தகுதி இல்லாதவர், மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க, மனைவியுடன் சேர்ந்து என் கால்களை பிடித்துக்கொண்டு அழுதார், சபை நாகரிகம் தெரியாதவர், இளம் வயதில் அவரை மத்திய அமைச்சராக்கியது தவறு’ என்று அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அன்புமணியின் 3 ஆண்டுகால தலைவர் பதவி மே 28-ம் தேதியுடன் காலாவதி ஆகிவிட்டதாகவும் தெரிவித்தார்.
முதல்கட்டமாக, நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை ராமதாஸ் வெளியேற்றினார். அதன்பிறகு செயற்குழு, பொதுக்குழு கூட்டம் மூலம், கட்சியில் முடிவு எடுக்கும் அதிகாரத்தை பெற்றார்.
புதுச்சேரி அடுத்த பட்டானூரில் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி நடைபெற்ற சிறப்பு பொதுக்குழுவில், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்குமாறு அன்புமணிக்கு 2 முறை நோட்டீஸ் அனுப்பியும் அவரிடம் இருந்து பதில் இல்லை.
இந்த சூழலில், தைலாபுரத்தில் செய்தியாளர்களை ராமதாஸ் நேற்று சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது: கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 2 முறை அவகாசம் அளித்தும் இது குறித்து விளக்கம் அளிக்க தவறியதால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையானவை என முடிவு செய்யப்படுகிறது. கட்சித் தலைமைக்கு கட்டுப்படாமல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டுள்ளார்.
கட்சியின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக அவரது செயல்பாடு உள்ளதால், பாமக செயல் தலைவர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்படுகிறார்.
பாமகவை சேர்ந்த யாரும் அவருடன் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது. மீறினால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அன்புமணியுடன் உள்ளவர்கள் மனம் திருந்தி வந்தால், மன்னித்து ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.
வேண்டுமானால் அன்புமணி தனி கட்சி தொடங்கலாம். ஆனால், எனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது. நான் தொடங்கிய கட்சிக்கு உரிமை கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் உளவு பார்க்கலாம். ஆனால், தந்தையான என்னை உளவு பார்க்க ஒட்டுக் கேட்பு கருவியை அன்புமணி பொருத்தியது மோசமான செயல்.
அடுத்த செயல் தலைவர் யார் என்பதை பிறகு கூறுகிறேன். பசுமை தாயகம் தலைமை பொறுப்பில் இருந்து சவுமியாவை நீக்குவது குறித்து, இப்போதைக்கு பேசத் தேவையில்லை. மகளை முன்னிறுத்த மகனை நான் புறக்கணிப்பதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு. இவ்வாறு அவர் கூறினார்.
அன்புமணியை நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை: வழக்கறிஞர் பாலு தகவல் – அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தது தொடர்பாக சென்னையில் கட்சியின் செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் க.பாலு நேற்று கூறியதாவது:
பாமக விதியின்படியும், கட்சி சட்டத்தின்படியும் கட்சி நிர்வாகப் பணிகள், கட்சிப் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரங்கள், பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், செயலாளர், பொருளாளருக்கு மட்டுமே உள்ளது. நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள நிறுவனருக்கு அதிகாரம் இல்லை. நிர்வாகிகளை பதவி நீக்கம் செய்வது, கூட்டம் நடத்துவது போன்ற எந்த முடிவுகளாக இருந்தாலும் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு கட்சி விதிகளுக்கு எதிரானது. எனவே, கட்சித் தலைவராக அன்புமணி நீடிக்கிறார்.
தவிர, கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் நடந்த கட்சி பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, கட்சித் தலைவர், செயலாளர், பொருளாளரின் பதவிக் காலத்தை 2026 ஆகஸ்ட் வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அன்புமணி உளவு பார்த்ததாக கூறப்படுவது தவறு. அவர் அப்படிப்பட்டவர் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.