சென்னை: காந்தி ஜெயந்தியையொட்டி, அவரது சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். நாடெங்கும் நேற்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார்.
சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
உடன் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, மு.பெ.சாமிநாதன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, எம்எல்ஏ-க்கள் இ.பரந்தாமன், த.வேலு, துணை மேயர் மு.மகேஷ்குமார், செய்தித்துறைச் செயலர் வே.ராஜாராமன், செய்தித்துறை இயக்குநர் இரா.வைத்திநாதன் உள்ளிட்டோர் இருந்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில், “நேர்மை, கண்ணியம், அகிம்சை என்ற உயர்ந்த நெறிகளை கடைபிடித்து, தன் வாழ்நாள் முழுவதையும் நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணித்து, உலகமே வியந்த தலைமைத் திறன் மற்றும் தன்னலமற்ற பண்பின் உருவாக விளங்கிய மகாத்மா காந்தியின் பிறந்த நாளில், நாம் அனைவரும் அறவழியில் நடக்க உறுதியேற்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கிண்டி, காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு
ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தலைவர்கள் மரியாதை: சென்னை, காந்தி மண்டபத்தில் தமிழக பாஜக சார்பில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன், தமிழக காங்கிரஸ் சார்பில் முன்னாள் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர், எம்.கிருஷ்ணசாமி, அமமுக சார்பில் துணை பொதுச்செயலாளர் ஜி.செந்தமிழன், கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள சிலைக்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த காந்தியின் உருவப் படத்துக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையிலான நிர்வாகிகளும், கோயம்பேட்டில் உள்ள தலைமையகத்தில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் உருவப் படத்துக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, பொருளாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலையச் செயலர் ப.பார்த்தசாரதி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் பி.மகேஷ், சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங், கூடுதல் மேலாளர்கள் தேஜ் பிரதாப் சிங், அங்குர் சவுகான் ஆகியோர் காந்தியின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.