புதுச்சேரியில் ஜான் குமாருக்கு அமைச்சரவையில் இடமளிக்க வேண்டும் என்பதற்காக, தங்கள் கட்சியைச் சேர்ந்த சாய் ஜெ.சரவணன்குமாரை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தது பாஜக தலைமை. அதேசமயம் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட ஜான் குமாருக்கு சுமார் 3 மாதங்கள் ஆகப்போகும் நிலையிலும் இன்னும் இலாகா ஒதுக்காமல் இருக்கிறார் முதல்வர் ரங்கசாமி.
இதனிடையே, பட்டியல் இனத்தைச் சேர்ந்த சாய் ஜெ.சரவணன்குமாரை அமைச்சரவையிலிருந்து தூக்கியது சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில், அரசுக்கு எதிராக பகிரங்கமாக வெடித்திருக்கும் சரவணன்குமார், அமைச்சரவையில் பட்டியல் இனத்தவருக்கு இடம் தராமல் ஒதுக்கியது, கரசூரில் தொழிற்சாலைகளை கொண்டு வரும் குழுவில் தொகுதி எம்எல்ஏவான தன்னை சேர்க்காமல் இருப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கிறார். இதற்கெல்லாம் இன்னும் 15 நாட்களில் தீர்வு கிடைக்காவிட்டால் தொகுதி மக்களுடன் சேர்ந்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவேன் என மிரட்டியும் இருக்கிறார் சரவணன்குமார்.
தேர்தல் நெருங்கும் வேளையில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் இப்படி தடாலடி காட்டி இருப்பது புதுச்சேரி பாஜகவில் மாத்திரமல்லாது ஆளும் கூட்டணிக்குள்ளும் புகைச்சலை உண்டாக்கி இருக்கிறது. இதனிடையே, “சட்டம் – ஒழுங்கு கெட்டுவிட்டது. உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இதில் கவனம் செலுத்தவில்லை. என்கவுன்ட்டர் நடத்தி ரவுடிகளை கட்டுப்படுத்த வேண்டும்” என்றும் சரவணன்குமார் வெடித்திருக்கிறார்.
இதுபற்றி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டதற்கு, “அமைச்சராக இருக்கும்போதெல்லாம் பேசாமல் இருந்துவிட்டு, தற்போது சாய் ஜெ.சரவணன்குமார் இப்படி பேசுவது ஏன்? என்கவுன்ட்டர் செய்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. தவிர, என்கவுன்ட்டர் பற்றி எம்எல்ஏ ஒருவரே பேசுவது அபத்தமானது” என்றார்.
என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் பேசியவர்கள், “சாய் ஜெ.சரவணன்குமாரின் ராஜினாமாவுக்கும் முதல்வர் ரங்கசாமிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதேசமயம், புதிதாக அமைச்சராக்கப்பட்ட ஜான் குமார், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகனை புதுச்சேரிக்கு அழைத்து வந்து அவரை வைத்து அரசை விமர்சனம் செய்வது ரங்கசாமிக்கு பிடிக்கவில்லை. இந்த விஷயத்தில் பாஜக தலைவர்கள் ஆழ்ந்த அமைதியில் இருப்பது தான் அவருக்கு இருக்கும் ஆகப்பெரிய வருத்தமே” என்கிறார்கள்.
பாஜக வட்டாரத்திலோ, “புதுச்சேரி பாஜகவில் மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்கள் தான் இப்போது ஆதிக்கம் செலுத்துகின்றனர். இப்போது நடக்கும் உட்கட்சி மோதல்களுக்கு அதுவும் முக்கிய காரணம்” என்கின்றனர். சாய் ஜெ.சரவணன்குமார் நீண்ட காலமாக பாஜகவில் இருப்பவர். நமச்சிவாயம் காங்கிரஸில் இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவுக்குள் நடக்கும் இந்த மோதலானது தேர்தல் வெற்றிக்கு வேட்டுவைக்கலாம் என்பதால் முன்னாள் அமைச்சரையும் இந்நாள் அமைச்சரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜக மேலிடத் தலைவர்கள் ஈடுபட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.