சென்னை: தனியார் நிறுவனம் வழங்கும் பணப்பலன் உறுதிசெய்யப்படும். எனவே தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 பகுதிகளுக்கான தூய்மைப் பணி தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இரண்டு மண்டல தூய்மைப்பணியாளர்களில் என்யூஎல்எம் பிரிவைச் சேர்ந்தவர்கள் கடந்த 12 நாட்களாக ரிப்பன் மாளிகை அருகே போராட்டம் நடத்தி வருகின்றனர். தூய்மைப் பணியாளர்களுடன் 12-க்கும் மேற்பட்ட சுற்றுகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில், தொடர்ந்து வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டுகோள் விடுத்து மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த ஆண்டுகளில் 11 மண்டலங்களில் தூய்மைப் பணி முறை மாற்றப்பட்டபோது செயல்படுத்தப்பட்ட அதே நடவடிக்கைகள் தற்போதும் பின்பற்றப்பட்டன. ஆனால் இந்த இரண்டு மண்டலங்களில், சுயஉதவிக்குழு அமைப்பின் கீழ் பணியாற்றி வந்த தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் இதை ஏற்காமல், காத்திருப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதனால் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்காக சென்னை மாநகராட்சிக்கு வரும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். போராட்டம் தொடர்வதால் சம்பந்தப்பட்ட மண்டலங்களில் தூய்மைப் பணிகளில் தொய்வு ஏற்பட்டு குப்பைகள் தேங்கி மக்களுக்கு பெரும் சுகாதாரப் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எந்தவொரு தற்காலிக தூய்மைப் பணியாளரும் நீக்கப்படவோ, பணி மறுப்பு செய்யப்படவோ இல்லை.
இதுவரை சுயஉதவிக் குழுக்கள் மூலமாகவே பணியில் ஈடுபடுத்தப்பட்ட தற்காலிக தூய்மைப் பணியாளர்களுக்கு பிஎஃப், இஎஸ்ஐ, போனஸ், பண்டிகைகால சிறப்பு உதவிகள், திருமண உதவித் தொகை ரூ.20 ஆயிரம், கல்வி உதவித் தொகை ரூ.12 ஆயிரம், மரண நிகழ்வுக்கான உதவி, தற்செயல், ஈட்டிய விடுப்புகள், இலவச சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள் என பல்வேறு சலுகையும், பணி பாதுகாப்பும் கிடைக்கும். இத்துடன் தமிழக அரசின் தூய்மைப் பணியாளர் நலவாரியம் மூலமாக பல்வேறு உதவிகள் மற்றும் சலுகைகளும் வழங்கப்படும்.
தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும், தனியார் நிறுவனம் பணியில் சேர்ப்பதையும் அவர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு மற்றும் பணப் பலன்கள் வழங்குவதையும் சென்னை மாநகராட்சி 100 சதவீதம் உறுதி செய்யும். எனவே, போராட்டத்தில் ஈடுபடும் அனைவரும் பொதுநலன் கருதியும், தங்களது பணி பாதுகாப்பு குறித்த உண்மை நிலையைப் புரிந்து கொண்டும், உயர் நீதிமன்ற வழக்குகளின் தீர்ப்பு மற்றும் தொழில் தீர்ப்பாயத்தின் முடிவுகளை எதிர்நோக்கியும், உடனடியாக வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.