சென்னை: அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், தலைமகன் நிமிர்த்திய தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம் என உறுதியேற்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 117-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது சிலையும், அதன் அருகே அவரது படமும் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன.
தமிழக அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதைத்தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருடன் வருகை தந்து அண்ணாவுக்கு மரியாதை செலுத்தினர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வி.கே.சசிகலா தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் வந்து அண்ணாவின் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தவெக சார்பில் தென்சென்னை மாவட்ட செயலாளர் திலீபன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் ஆகியோரும் மரியாதை செலுத்தினார். முன்னதாக அண்ணா அறிவாலயத்திலும், வள்ளுவர் கோட்டத்திலும் அண்ணாவின் படங்களுக்கு முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் மரியாதை செலுத்தினர். இதற்கிடையே அரசியல் தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்திகளில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: தமிழன்னை தந்த மகன். திமுக எனும் நம் உயிரை தாயென அளித்த திருமகன் அண்ணா. தலை
மகன் நிமிர்த்திய தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: தமிழகம் இருக்கும் வரை ‘அண்ணா’வே நம்மை ஆள்கிறார். அண்ணா, கருணாநிதி வழியில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மீண்டும் திமுக அரசை அமைக்க உறுதியேற்போம்.

தலைமையில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன்,
ஜெயக்குமார், தமிழ்மகன் உசேன், எஸ்.பி.வேலுமணி,
வளர்மதி உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: திராவிட அரசியலின் ஈடு இணையற்ற தலைமகன் அண்ணாவின் பிறந்தநாளில், குடும்ப ஆட்சியின் பிடியில் சிக்கியுள்ள தமிழகத்தை மீட்டு, சாமானிய மக்களுக்கான ஆட்சியை நிறுவ
உறுதியேற்போம்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: கண்ணாடி பார்க்காத முகத்துடன், எளிமையான தோற்றத்துடன், தன் சொற்களால் தமிழினத்தையே கட்டிப்போட்ட அண்ணாவை போற்றி வணங்குவோம்.

மரியாதை செலுத்திய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: இல்லாதவர்களுக்கு தேவையானதை இருப்பவர்கள் அளிக்க முன்வர வேண்டுமென்ற தத்துவத்துக்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டிய அண்ணாவின் பிறந்தநாளில் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாமக தலைவர் அன்புமணி: தமிழகத்தில் மாபெரும் சீர்திருத்தங்களை முன்னெடுத்தவர். மாநில சுயாட்சி கொள்கையில் உறுதியாக இருந்தவர் அண்ணா. அவரது கொள்கை துணிவையும், மக்கள் நலனையும் போற்றி வணங்குவோம்.
திக தலைவர் கி.வீரமணி: சுயமரியாதை திருமண சட்டம், ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றம், இருமொழிக் கொள்கை என அழிக்க முடியாத முப்பெரும் சாதனைகளைப் படைத்த அண்ணா, உடலால் மறைந்தாலும், கொள்கையால் என்றும் வாழ்வார்.
கனிமொழி எம்.பி.: பெரியாரின் கனவை நனவாக்கிய அண்ணாவின் பிறந்தநாள் தமிழர்களின் எழுச்சி நாள். அவர் காட்டிய லட்சியப் பாதையில் நம் பயணம் என்றும் தொடரும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தென்னாட்டின் பெர்னாட்ஷா அண்ணாவின் பிறந்தநாளில் அவர் வகுத்துக் கொடுத்த பாதையில் தொடர்ந்து பயணிக்க உறுதியேற்போம்.
தவெக தலைவர் விஜய்: தேர்தல் அரசியலில் மாபெரும் ஆட்சி அதிகார மாற்றத்துக்கு வழிவகுத்த அண்ணாவின் அரசியல் மந்திரத்தை பின்பற்றி 1967-ல் நடந்த ஆட்சி மாற்றத்தை மீண்டும் நிகழ்த்தி காட்ட உறுதியேற்போம்.