சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த 34 நாட்களில் 10,000 கி.மீ. தூரம் பயணம் செய்து, 100 தொகுதிகளில் ‘மக்களை காப்போம், தமிழகம் மீட்போம்’ பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ளார். தமிழகம் முழுவதும் சென்று மக்களை சந்திக்கும் வகையில் ‘மக்களை காப்போம், தமிழகம் மீட்போம்’ என்ற பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த ஜூலை 7-ம் தேதி தொடங்கினார்.
விவசாயிகள், வியாபாரிகள், நெசவாளர்கள், மீனவர்கள் என பல்வேறு தரப்பினருடன் 150-க்கும் மேற்பட்டகலந்துரையாடல்களில் பங்கேற்று அவர்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டறிந்தார். அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள், தீர்வுகளையும் வழங்கினார்.
இந்த சுற்றுப் பயணத்துக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பிரச்சார பேருந்தில் தொடர் பயணம் செய்துவரும் பழனிசாமி, 34 நாட்களில் 10,000 கி.மீ. தூரம் கடந்து, சராசரியாக நாள்தோறும் சுமார் 14 மணி நேரத்தை மக்களிடையே செலவழித்துள்ளார். இதுவரை அவரது பிரச்சாரம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வுகளில் 52 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மீண்டும் ரூ.2,500 “பழனிசாமியின் எளிமையான பேச்சும், மக்களுடன் இயல்பாக பழகும் தன்மையும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பயணத்தின்போது, திமுக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்ததோடு, அதிமுகவின் சாதனைகளையும் மக்களிடம் நினைவுபடுத்தினார்.
பொங்கலுக்கு மீண்டும் ரூ.2,500, இலவச வேட்டி சேலை, தீபாவளிக்கு சேலை, ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் போன்ற வாக்குறுதிகளையும் அளித்துள்ளார். இந்த பயணத்தையொட்டி வெளியான பிரச்சாரப் பாடல்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது’’ என்று அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, ஆற்காட்டில் 100-வது தொகுதி பயணத்தை நிறைவு செய்த பழனிசாமி, “இந்த எழுச்சிப் பயணம் தொடக்கம் மட்டுமே. உண்மை, உழைப்புடன் பாடுபட்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டிய தமிழகத்தை உருவாக்குவோம்” என்று சூளுரைத்துள்ளார். அவரது இந்த சுற்றுப் பயணம் அதிமுக தொண்டர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.