தமிழகத்தில் எந்தப் பத்திரப் பதிவு அலுவலகத்தில் 10 சதவீதம் லஞ்சம் பெறப்படுகிறது என்பதை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூற வேண்டும் என மதுரையில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் 81-வது வார்டு பாரதியார் தெருவில் புதிய சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்ற பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எந்த ஓர் அடிப்படைப் பணிகளும் நடைபெறவில்லை. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தனது பிரசாரத்தின்போது பதிவுத் துறையில் ஒரு பத்திரப் பதிவுக்கு 10 சதவீதம் லஞ்சம் பெறப்படுவதாக கூறினார்.
எந்தப் பத்திரப் பதிவு அலுவலகத்தில் 10 சதவீதம் லஞ்சம் பெறப்படுகிறது என்பதை அவர் கூற வேண்டும். கடந்த கால ஆட்சியில் பத்திரப்பதிவு துறையில் என்ன என்ன நடந்தது என்பது குறித்த விவரம் இருக்கிறது. அதற்கான காலகட்டம் வரும்போது நிச்சயம் கூறுவேன். தற்போது இது தொடர்பாக சிபிஐ வழக்குகள் நடந்துவருவதால் அது குறித்து விரிவாகச் சொல்ல விரும்பவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எந்தப் பகுதியிலும் தவறான ஒரு பத்திரமும் பதிவு செய்யப்படவில்லை. எந்த சார் பதிவாளர் தவறு செய்தார் என சுட்டிக்காட்டினால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். ஆதாரமில்லாமல் அரசியல் செய்வதற்காக எதை வேண்டுமானாலும் பேசக் கூடாது. இதுவரை, தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு கடந்த 4-ம் தேதி ரூ.274 கோடிக்கு பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மதுரையில் ரூ.8 ஆயிரம் கோடிக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்து இருக்கிறோம். குறிப்பாக மேற்குத் தொகுதியில் 300-க்கும் மேற்பட்ட நலத்திட்ட உதவிகளைச் செய்திருக்கிறோம். சுமார் ரூ.100 கோடி மதிப்பீட்டில் இணைப்புப் பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொண்டு வருகிறோம். கடந்த அதிமுக ஆட்சியின்போது நடந்த பணிகளுக்கும், இப்போது நடைபெறக்கூடிய பணிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், தற்போதைய திமுக அரசு எவ்வாறு சிறப்பாகச் செயல்படுகிறது எனத் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.