சென்னை: சென்னையில் வரும் நவம்பர் மாத இறுதிக்குள் ஒரு லட்சம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகரில் தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களால் குழந்தைகளும், பெரியவர்களும், வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. ரேபிஸ் நோயால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரிக்கின்றன.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி நிர்வாகம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி போடும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
12,580 நாய்களுக்கு மைக்ரோ சிப்: கடந்த ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்படி சென்னையில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் தெரு நாய்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றுக்கு தடுப்பூசி செலுத்துதல், கருத்தடை அறுவை சிகிச்சை செய்தல், மைக்ரோ சிப் பொருத்துதல் உள்ளிட்ட பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இதுவரை 12 ஆயிரத்து 580 தெருநாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது.
அனைத்து தெரு நாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்களை கடந்த ஆக.9-ம் தேதி மாநகராட்சி தொடங்கியது. இந்த சிறப்பு முகாம் மூலம் மாநகராட்சி கால்நடைத் துறை ஊழியர்கள், மண்டலம் வாரியாக சென்று தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
இதுவரை 53 ஆயிரம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாத இறுதிக்குள் ஒரு லட்சம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.