திருச்சி: திருச்சி அருகே ராமர் படத்தை தீ வைத்து எரித்த ஐந்தாம் தமிழ்ச் சங்க நிர்வாகிகளை கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அந்த அமைப்பின் நிர்வாகிகள் 4 பேரை போலீஸார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள அயன்புத்தூர் கிராமத்தில் ஐந்தாம் தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பு சார்பில் கடந்த 28-ம் தேதி இரவு ஆசிவக திருமால் வழிகாட்டு விழா என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், அந்த அமைப்பின் நிர்வாகிகள் 6 பேர் ராமர் படம் பொறிக்கப்பட்ட பிளக்ஸ் பேனரை அவமதித்ததுடன், தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர். மேலும், ராமரை இழிவாகப் பேசியதுடன், ராவணனைப் போற்றும் வகையில் பேசியுள்ளனர். அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர்.
இதையடுத்து, சமூக வலைதளங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் உள்ள பதிவுகளை கண்காணித்து வரும் காவலர் கார்த்திக், இந்தப் பதிவு மக்களிடையே கலவரத்தை தூண்டி, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்தார்.
அதன்பேரில், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது 6 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள கவரப்பட்டியை சேர்ந்த அடைக்கலராஜ்(36) என்பவரை போலீஸார் கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வந்தனர்.
இதற்கிடையே, ராமர் அவமதிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில், ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.சீனிவாசன் தலைமையில் நேற்று முன்தினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.
மேலும், ஒருங்கிணைப்பாளர் என்.ஆர். சீனிவாசன், பாஜக மாவட்டத் தலைவர் ஒண்டிமுத்து, மாநில மகளிரணித் துணைத் தலைவர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் தலைமையில் குண்டூர் எம்ஐஇடி எதிரே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, ராமரை அவமதித்த அமைப்பை தடை செய்ய வேண்டும், அந்த அமைப்பை சேர்ந்தவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
தொடர்ந்து, ஐந்தாம் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் நெப்போலியன்(31), சிலேஸ்வரன்(30), வசந்தகுமார் (21) ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்தனர். பாண்டியன் உள்ளிட்டோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.