சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான 4 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளுக்கு, மத்திய அரசு, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பத்திரிகைகள் விருது வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி 4 ஆண்டுகள் முடிவடைந்து 5-ம் ஆண்டு தொடங்கும் நிலையில், தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் வழிகாட்டுகின்றன. காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி மருத்துவம் திட்டம் ஆகியவை அயல் நாடுகளிலும், ஐ.நா. சபையிலும் பாராட்டி வரவேற்கப்படுகின்றன.
கரோனா, இயற்கை பேரிடர், உதவ வேண்டிய மத்திய அரசின் பாராமுகம், நிதி அளிக்க முடியாதென நாடாளுமன்றத்திலேயே கூறிய பிடிவாதம் அனைத்தையும் கடந்து தமிழக மக்களை எல்லா வகையிலும் காத்து, எல்லாருக்கும் எல்லாம் என்பதைத் தத்துவமாகவே வடித்துத் திட்டங்களைச் செயல்படுத்தி தமிழகத்தை, நாட்டிலேயே முதல் மாநிலமாக உயர்த்தியுள்ளார்.
இன்று மகளிர், மாணவர்கள் தொழிலாளர்கள், தொழில் முகவர்கள் என அனைவரும் பாராட்டுகின்றனர். பத்திரிகைகள் பாராட்டுகின்றன, ஊடகங்கள் போற்றுகின்றன. பிற மாநில அரசுகள் பாராட்டுகின்றன. நீதிமன்றங்கள் பாராட்டுகின்றன. இத்தனைக்கும் மேலாக மத்திய அரசே தமிழக அரசைப் பாராட்டி ஏராளமான விருதுகளை வழங்கியுள்ளது.
புதுடெல்லியில் 2024 நவ.30-ம் தேதி அன்று நடைபெற்ற இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் ‘ஃபிக்கி டர்ஃப் 2024’ 14-வது சர்வதேச விளையாட்டுக் கருத்தரங்கில் 2024-ம் ஆண்டுக்கான இந்திய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழாவில் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருதை காண்பித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் முதல்வரிடம் காண்பித்து அதுல்ய மிஸ்ரா வாழ்த்துப் பெற்றார்.
மாற்றுத் திறனாளிகளுக்குச் சிறப்பாகச் சேவை புரிந்த முதல் மாநிலமாகத் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசால் 2021 டிச.6-ம் தேதி அன்றும் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை 2021 டிச. 8-ம் தேதி மாற்றுத் திறனாளிகள் உரிமை ஏற்றத்துக்காகவும் வழங்கப்பட்ட விருதுகள் தமிழகத்தின் பெருமையை பறைசாற்றுகின்றன.
இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்ட 112 மாவட்டங்களில் ஒன்றாக குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மேம்பாட்டுக்காக விருதுநகர் மாவட்டத்தின் சிறந்த பங்களிப்புக்கு 2022 ஜுலை 1-ம் தேதி அன்று வழங்கப்பட்ட தேசிய அளவிலான முதல் பரிசு. சுகாதாரத்துக்கான மதிப்பீட்டில் தேசிய அளவில் 3-ம் இடம் பெற்றதற்காக 2022 அக்.2-ம் தேதி அன்று வழங்கப்பட்ட குடியரசுத் தலைவர் விருது என மத்திய அரசு வழங்கிய பல்வேறு விருதுகளுடன், தேசிய அளவிலும், மாநில அளவிலும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் தமிழக அரசின் நிர்வாகத் திறனைப் பாராட்டிப் பல விருதுகளை வழங்கியுள்ளன. இவை தவிர, பல்வேறு பத்திரிகைகளும் முதல்வரின் ஆட்சியைப் பாராட்டி மிகப்பல விருதுகளை வழங்கியுள்ளன. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: மக்களால் எளிதில் அணுகக்கூடிய, எல்லோருடைய குறைகளையும் காது கொடுத்துக் கேட்டுத் தீர்வு காணக் கூடிய நமது அரசில், எனது நேரடி கட்டுப்பாட்டில், ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையில் மக்களின் குறைகளை களைந்து, ஏற்றத்துக்கு முதற்படியாய் விளங்குகிறது முதல்வரின் முகவரி துறை. பொதுமக்கள் இந்த திட்டத்தினை சிறப்புற பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.