சென்னை: வைக்கம் போராட்டத்தில் பெரியார் கைதாகி சிறை வைக்கப்பட்டிருந்த அறூகுட்டி சிறையை நினைவகமாக மாற்றும் பணிக்கு அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார். கேரள மாநிலம் வைக்கம் போராட்டத்தில், தந்தை பெரியார் பங்கேற்றபோது கைதாகி, அங்குள்ள அறூகுட்டி சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அந்த சிறையை பெரியார் நினைவகமாக மாற்ற முதல்வர் மு.க.ஸ்டாலி்ன் அறிவுறுத்தி இருந்தார்.
அதன்படி, வைக்கத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கேரள மீன்வளம், கலாச்சார துறை அமைச்சர் சஜி செரியன் தலைமையில், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முன்னிலையில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார்.
அப்போது அமைச்சர் வேலு பேசியதாவது: வைக்கம் போராட்டத்தில் கைதான பெரியார் கடந்த 1924-ம் ஆண்டு ஏப்.22-ல் ஒரு மாதம் சிறை தண்டனை பெற்று அறூகுட்டி சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலையாகி வெளியே வந்த பெரியார், “எந்த நோக்கத்துக்காக வைக்கம் வந்தேனோ, அது நிறைவேறும் வரை போராடுவேன்“ என்று மீண்டும் போராடியதால், ஒரு வாரத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டு திருவாங்கூர் சென்ட்ரல் ஜெயிலில் கடுங்காவல் கைதியாக வைக்கப்பட்டார்.
வைக்கம் போராட்டத்துக்கு பிறகுதான் கோயில் நுழைவு கிளர்ச்சி எங்கும் நடைபெற்று, திருவாங்கூர் கோயில்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திறந்து விடப்பட்டன. இதனால், வைக்கம் போராட்டம் நாடெங்கும் புகழ் பெற்றுவிட்டது. பெரியாருக்கு வைக்கம் வீரர் என்ற பெயர் நிலைத்தது.
பெரியார் முதல்முறை கைது செய்யப்பட்டு அறூகுட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த இடத்தில், சிறைச்சாலையை போல நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் கோரிக்கை விடுத்தார்.
அதன் தொடர்ச்சியாக, கேரளா அரசு 0.58 சென்ட் நிலத்தை எந்தவித கட்டணமுமின்றி, தமிழக அரசிடம் ஒப்படைத்துள்ளது. இங்கு ரூ.3.99 கோடி மதிப்பீட்டில், 1,141 சதுரஅடி பரப்பளவில் நினைவகம் அமைக்கப்பட உள்ளது. இந்த நினைவகத்தில், மாதிரி சிறை அமைப்பு, புகைப்பட கண்காட்சி அரங்கம், பெரியாரின் சிலை ஆகியவை இடம் பெறுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார். விழாவில், ஆலப்புழா எம்.பி. கே.சி.வேணுகோபால், அரூர் எம்எல்ஏ தலீமா ஜோஜோ, ஆலப்புழா ஆட்சியர் அலெக்ஸ்வர்கீஸ், தமிழக பொதுப்பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளர்எஸ்.மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.