வைகை அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை நெருங்கி வருகிறது. இதனால் நீர்தேக்கப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் நீர் புகுந்ததுடன், சாலைகளையும் அணை நீர் மூழ்கடித்தது. இதனால் கிராமப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
வைகை அணையில் 21 கிலோ மீட்டர் சுற்றளவில் தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. அணையின் முழுக் கொள்ளளவான 71 அடியாக நீர்மட்டம் உயரும்போது அரப்படித்தேவன்பட்டி, கருப்பத்தேவன்பட்டி, குன்னூர், வைகைப்புதூர், கீழக்காமக்காபட்டி உள்ளிட்ட கிராமங்கள் வரை நீர் கடல்போல் தேங்கி நிற்கும்.
தற்போது தொடர் நீர்வரத்தினால் கடந்த 5ம் தேதி நீர்மட்டம் 69 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. மேலும் முழுக் கொள்ளளவுக்கு நீரை தேக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் நீர்மட்டம் இன்று 69.70 அடியை எட்டியுள்ளது. முழுக் கொள்ளளவை நெருங்கியுள்ளதால் வைகை அணையைச் சுற்றியுள்ள கிராமங்கள் வரை நீர் தேங்கி நிற்கிறது.
குறிப்பாக பெரியகுளம் ஒன்றியம் சர்க்கரைப்பட்டி-மேலக்காமக்காபட்டி இடையே நீர் சூழ்ந்துள்ளது. இதனால் இச்சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதசாரிகளும், இருசக்கர வாகனங்களும் காளவாசல், மயானம் வழியே உள்ள சிறிய பாதையில் கடந்து செல்கின்றனர்.
அவசர மருத்துவ தேவைக்காக ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள்கூட இப்பகுதியை கடந்து செல்ல முடியவில்லை. இதனால் மேலக்காமக்கா பட்டி, கீழக்காமக்காபட்டி பகுதி மக்கள் சுற்றுப்பாதையில் வடுகபட்டி வழியே கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதுகுறித்து இக்கிராமத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்பவர் கூறுகையில், அணை நீர்மட்டம் உயரும் போதெல்லாம் இந்த சாலையில் நீர் புகுந்து விடுகிறது. நீர் குறையும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. சுற்றுப்பாதையில் தெருவிளக்கு உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை. இதனால் சர்க்கரைப்பட்டி, சாவடிபட்டி, மேல, கீழ காமக்காபட்டி உள்ளிட்ட பல கிராமங்கள் பாதிப்படைகின்றன. ஆகவே இந்த சாலையில் பாலம் அமைக்க வேண்டும் என்றார்.