சென்னை: “வேளாண்மை கடன் வழங்குவதில் சிபில் ஸ்கோர் அளவீட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, தமிழக முதல்வர் தலையிட்டு வேளாண் தொழிலுக்கான கடன்களில் சிபில் ஸ்கோர் முறையை கைவிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்” என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.குணசேகரன் மற்றும் பொதுச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “மே 26 அன்று தமிழ்நாடு கூட்டுறவுத் துறை பதிவாளர் விவசாயிகளுக்கு வணிக வங்கிகள் பின்பற்றுகிற நடைமுறையின்படி, இனி கூட்டுறவு கடன் பெறுவோர்களின் சிபில் ஸ்கோர் (CIBIL score) மதிப்பெண் பார்த்து தகுதி உள்ளோருக்கு மட்டும் கடன் வழங்கிட வேண்டுமென உத்தரவை பிறப்பித்துள்ளார். ரிசர்வ் வங்கி அண்மையில் புதிதாக பிறப்பித்த 9 விதிகள் கூட்டுறவு துறையை கட்டுப்படுத்தாது என கூட்டுறவுத் துறை அமைச்சர் கூறிய நிலையில், கூட்டடுறவுத் துறை அமைச்சரின் அறிவிப்புக்கு மாறாக இவரது துறையின் தலைமை அலுவலர் உத்தரவிட்டாரா என அறிய விழைகிறோம்.
வேளாண்மை என்பது இயற்கையை சார்ந்த தொழிலாகும். விவசாயிகள் தன் மூலதனத்தை வெட்ட வெளி நிலத்தில் போட்டுவிட்டு இயற்கை பேரிடர்கள், பருவ கால மாறுபாடுகள், இடுபொருள்களின் மாற்றங்களினால் ஏற்படும் பயிர் வளர் நிலை இடர்களை எல்லாம் தாண்டி, பல மாதங்கள் காத்திருந்து போட்ட முதலீட்டை திருப்பி எடுக்கும் வரை இவர்கள் மட்டுமல்ல, இவர்களின் குடும்ப உறுப்பினர்களும் படும் துன்பங்கள் மாளாது. இப்படியான பாதிப்புகள் மிக கூடுதலாகி வரும் நிலையில், சிபில் ஸ்கோர் தகுதியைக் அளவீடாக கொண்டு விவசாயிகள் கடனை தீர்மானிக்க கூடாது.
கடன் பெற்றோர் அக்கடனை திருப்பி செலுத்திய முறைகளை கணக்கீடாக கொண்ட சிபில் ஸ்கோர் மதிப்பெண்களின் அளவீடு தான் விவசாயிகள் கடன் பெறுவதற்கான தகுதியாக கொண்டு தீர்மானிக்கப்படும் என்றால் பெரும்பகுதி விவசாயிகளுக்கு கடனே கிடைக்காது. வணிக வங்கிகளில் நடைமுறைகளில் உள்ள இம்முறை இப்போது கூட்டுறவுத்துறையிலும் அமல்படுத்தப்படுகிறது. வேளாண்மை தொழிலை புரிந்து கொள்ளாது, குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து, எந்த இடர்கள் நாட்டில் வந்தாலும் தன் வருமானத்தில் பங்கம் இல்லாமல் இருக்கிற உயர் அலுவலரின் எதார்த்தமற்ற சிந்தனைகளால் வந்த அறிவிப்பாகும் இது.
வேளாண்மையில் ஏற்படும் இழப்பீட்டை சிபில் ஸ்கோர் அளவீட்டில் கணக்கிட்டு நிவாரணம் மற்றும் காப்பீடு திட்டத்தை முதலில் அமல் படுத்தினால் விவசாயிகளின் வாழ்வு தகுதியும் சிபில் ஸ்கோர் வரம்பில் வந்துவிடும். இப்படியான நெருக்கடிகள் தீராத நிலையில் வேளாண்மை கடன் வழங்குவதில் சிபில் ஸ்கோர் அளவீட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே தமிழக முதல்வர் தலையிட்டு வேளாண் தொழிலுக்கான கடன்களில் சிபில் ஸ்கோர் முறையை கைவிட நடவடிக்கை எடுத்திட வேண்டும், என்று அதில் கூறப்பட்டுள்ளது.
விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் எதிர்ப்பு: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. கூட்டுறவுத் துறை வங்கிகளில் ‘சிபில் ஸ்கோர்’ தரவு அடிப்படையில் கடன் வழங்கும் புதிய திட்டத்தை அமல்படுத்தக் கூடாது. உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கூறியது: ‘தமிழக அரசின் கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் வங்கிகளில் ‘சிபில் ஸ்கோர்’ அடிப்படையில் பயிர் கடன் வழங்க வேண்டும் என சுற்றறிக்கையை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சமீபத்தில் அனுப்பியுள்ளார். இந்நடவடிக்கை விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புதிய திட்டத்தால் விவசாயிகள் கடனுதவி பெறுவதில் சிரமம் ஏற்படும். ஏற்கனவே கூட்டுறவுத்துறை வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் குறைவாகவே வழங்கபட்டு வரும் நிலையில் ‘சிபில் ஸ்கோர்’ அடிப்படையில் இனி கடன் வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஏற்புடையதல்ல. மற்ற மாநிலங்களை போல தமிழக அரசு விவசாயிகளுக்கு உரிமைத்தொகை வழங்க வேண்டும். அதை விடுத்து விவசாயிகளுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் இது போன்ற திட்டங்களை அமல்படுத்தினால் விவசாய தொழிலை பலர் கைவிட வழிவகுக்கும்.
‘சிபில்’ என்ற தனியார் அமைப்பின் அறிக்கை எந்த வகையில் நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதே தெரியாத நிலையில், விவசாயிகளுக்கு ‘சிபில் ஸ்கோர்’ அடிப்படையில் கடன் என்ற அறிவிப்பு கடுமை நெருக்கடியை உருவாக்கும். எனவே, இந்த திட்டத்தை உடனடியாக திரும்ப பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அவர்கள் தெரிவித்தனர்.